உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் 2023,ஜூன் 11 முதல் 13 வரை நடைபெறவுள்ள ஜி20 மேம்பாட்டு அமைச்சர்கள் கூட்டத்திற்கு வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் தலைமை தாங்குவார். ஜி20 இந்திய தலைமைத்துவத்தின் கீழ், கூட்டத்தின் தொடக்கத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி சிறப்பு காணொலி காட்சி மூலம் உரை நிகழ்த்துவார்.
பொருளாதார மந்தநிலை, கடன் அழுத்தம், பருவநிலை மாற்றத்தின் தாக்கங்கள், மாசு மற்றும் பல்லுயிர் பெருக்க இழப்பு, அதிகரித்துவரும் வறுமை, சமத்துவமின்மை, உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பின்மை, வாழ்க்கைச் செலவு நெருக்கடி, உலகளாவிய விநியோகத் தொடரில் இடையூறுகள், புவி-அரசியல் மோதல்கள், பதற்றங்கள் ஆகியவற்றால் மோசமாகியுள்ள வளர்ச்சி சவால்களுக்கு இடையே வாரணாசியில் அமைச்சர்கள் அளவிலான மேம்பாட்டுக் கூட்டம் நடைபெறுகிறது.
வளரும் நாடுகளின் முன்னேற்றத்தைத் தடுக்கின்ற அதிக செலவுபிடிக்கும் வர்த்தகப் பரிமாற்றங்களைத் தவிர்த்து, வளர்ச்சி, சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை நிகழ்ச்சி நிரல்களுக்கு இடையே, நீடிக்கவல்ல வளர்ச்சி இலக்குகளின் சாதனைகளை விரைவுபடுத்துவதற்கான நடவடிக்கைகளைக் கூட்டாக ஒப்புக்கொள்வதற்கு ஜி20 மேம்பாட்டு அமைச்சர்கள் கூட்டம் ஒரு வாய்ப்பாக அமையும்.
வாரணாசி கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் செப்டம்பர் மாதம் நியூயார்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் நீடிக்கவல்ல வளர்ச்சி இலக்குககள் உச்சி மாநாட்டிற்குப் பங்களிப்பு செய்யும். மேம்பாட்டுக் கூட்டத்திற்கு முன்னதாக நான்காவது மற்றும் இறுதி மேம்பாட்டுப் பணிக்குழுக் கூட்டம் தில்லியில் ஜூன் 6 முதல் 9 வரை நடைபெற்றது.
கூட்டத்தில் மொத்தம் 200 பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகின் மிகப் பழமையான நகரங்களில் ஒன்றான வாரணாசியின் வளமான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்கள் பற்றிய ஒரு பார்வையைப் பிரதிநிதிகளுக்கு வழங்குவதற்காக கலாச்சார நிகழ்ச்சிகள், கண்காட்சிகள் மற்றும் சுற்றுலாப் பயணங்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
எம்.பிரபாகரன்