மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா, மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித்துறை அமைச்சர் திரு சர்பானந்தா சோனோவால் ஆகியோர் இன்று கொச்சி துறைமுக ஆணையத்தின் வில்லிங்டன் தீவில் உள்ள சாமுத்ரிகா ஹாலில், தோப்பும்பாடியில் உள்ள கொச்சி மீன்பிடி துறைமுகத்தை நவீனமயமாக்குதல் மற்றும் மேம்படுத்துவதற்கான திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினர். நிகழ்ச்சியில், எர்ணாகுளம் மக்களவைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு ஹிபி ஈடன், கொச்சி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் திரு கே.ஜே.மாக்சி, எர்ணாகுளம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் திரு. டி.ஜே.வினோத், கொச்சி மாநகராட்சி மேயர் எம். அனில் குமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் மீன்வளத்துறை, துறைமுக அமைச்சகத்துடன் ஒன்றிணைந்து பிரதமர் மத்ஸ்ய சம்பாத திட்டத்தின் கீழ், மத்திய நிதியுதவியாக ரூ. 100 கோடியுடன் மொத்தம் ரூ. 169.17 கோடியில் தோப்பும்பாடியில் உள்ள கொச்சி மீன்பிடித் துறைமுகத்தை நவீனமயமாக்குதல் மற்றும் மேம்படுத்துவதற்கான கொச்சி துறைமுக ஆணையத்தின் முன்மொழிவுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தத் திட்டம் கொச்சி மீன்பிடி துறைமுகத்தில் இயங்கும் 700 மீன்பிடி படகுகளுக்கு பயனளிக்கும், இது சுமார் 10,000 மீனவர்களின் நேரடி வாழ்வாதாரத்திற்கும், சுமார் 30,000 மீனவர்களின் மறைமுக வாழ்வாதாரத்திற்கும் உதவும். நவீனமயமாக்கல் திட்டம், மீன் மற்றும் மீன் பொருட்கள் ஏற்றுமதி மூலம் வருவாய் அதிகரிப்பதற்கு துணைபுரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திவாஹர்