குஜராத் கட்ச் பகுதியில் ‘பிபர்ஜாய்’ புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா இன்று ஆய்வு செய்தார். பிபர்ஜாய் புயல் குஜராத் கடலோர பகுதியில் ஜூன் 15 அன்று (நாளை) அதிதீவிர புயலாக கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பின்னர், பூஜ் விமானப்படை தளத்திற்கு சென்ற மத்திய சுகாதாரத்துறை அமைச்சர், இந்திய விமானப் படையின் ‘கருடா’ அவசர கால மீட்புக்குழுவின் தயார் நிலை குறித்து ஆய்வு செய்தார். பின்னர் பேசிய அவர், புயல் பாதிப்பிலிருந்து சொத்துக்களையும், உயிர்களையும் பாதுகாப்பதற்கான நமது வீரர்கள் தயார் நிலையில் உள்ளதாக குறிப்பிட்டார்.
அதனைத்தொடர்ந்து பூஜ்ஜில் உள்ள கே கே படேல் சிறப்பு பன்னோக்கு மருத்துவமனைக்கு சென்று அவசர பிரிவின் தயார் நிலை குறித்து கேட்டறிந்தார். அத்துடன், கட்ச் மாவட்ட அரசு மருத்துவமனைகள், அறக்கட்டளைகள் நடத்தும் மருத்துவமனைகள் மற்றும் இதர மருத்துவமனைகளில் ஆக்சிஜன், பிராணவாயு மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகள் இருப்பு குறித்து அவர் ஆய்வு செய்தார்.
புயல் கரையை கடந்த பிறகு, தேவைப்படும் உடனடி சுகாதார வசதிகள் குறித்து அவர் ஆய்வு மேற்கொண்டார்.
கட்ச் பகுதியில் 108 அவசர கால வாகன ஊர்திகளின் ஓட்டுநர்களுடன் அவர் உரையாடினார். அவர்களுடைய உற்சாகமும், ஆதரவும், நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாக கூறினார்.
திவாஹர்