காசநோய்க்கான சுகாதார தொழில்நுட்பங்களின் புதிய கண்டுபிடிப்புகளைப் பகிர்ந்து கொள்ளும் பயிலரங்கில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை இணை அமைச்சர் பேராசிரியர் எஸ் பி சிங் பாகெல் உரையாற்றினார். புதுதில்லியில் இன்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் இதற்கு ஏற்பாடு செய்திருந்தது. காசநோயைக் கண்டறிவதற்கு புதிய சுகாதாரக் கண்டுபிடிப்புத் தொழில்நுட்பங்களை ஊக்கப்படுத்துவதும் காசநோய் ஒழிப்புத் திட்டத்திற்கு இவற்றை பயன்படுத்துவதும் இந்த இரண்டு நாள் பயிலரங்கின் நோக்கமாகும்.
2025-க்குள் காசநோயை முற்றிலுமாக ஒழிப்பது என்ற இலக்கு பிரதமரின் அரசியல் உறுதியையும், நிர்வாக உறுதிப்பாட்டையும் பிரதிபலிக்கிறது என்று பேராசிரியர் சிங் குறிப்பிட்டார். கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் காசநோயாளிகளின் எண்ணிக்கை கணிசமான அளவு குறைந்திருப்பதாகவும் அவர் கூறினார். இந்த இயக்கத்தின் வெற்றிக்கு முக்கியமாக இருப்பது புதிய கண்டுபிடிப்பு என்று கூறிய அவர், இலக்கை எட்டுவதற்கு தரமான பொருட்களைக் கண்டுபிடிப்பாளர்கள் தயாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இந்தப் பயிலரங்கில் சுகாதாரத்துறைச் செயலாளர் திரு ராஜேஷ் பூஷன், சுகாதார ஆராய்ச்சித்துறையின் செயலாளரும் ஐசிஎம்ஆர் தலைமை இயக்குநருமான டாக்டர் ராஜீவ் பல், உலக சுகாதார நிறுவனத்தின் முன்னாள் தலைமை விஞ்ஞானி டாக்டர் சௌமியா சுவாமிநாதன் உள்ளிட்டோர் உரையாற்றினர்.
திவாஹர்