உள்கட்டமைப்புக்கு அப்பால் நாட்டிற்கான பயன்பாடுகளை விரிவுபடுத்தும் வகையில் வளர்ச்சி அணுகுமுறையுடன் பிரதமரின் விரைவு சக்தித் திட்டத்தை திறனுடன் செயல்படுத்த வேண்டும் என்று மத்திய வர்த்தகம், தொழில்துறை, நுகர்வோர் விவகாரம், உணவு, பொது விநியோகம் மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். பிரதமரின் விரைவு சக்தித் திட்டத்தின் அமலாக்கம் குறித்து தொழில்துறை மேம்பாடு மற்றும் உள்நாட்டு வர்த்தகத் துறை அதிகாரிகள் மற்றும் எட்டு அமைச்சக அதிகாரிகளுடன் புதுதில்லியில் நேற்று அவர் ஆய்வு மேற்கொண்டார். இந்தியாவின் உள்கட்டமைப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சியை மேலும் மேம்படுத்த சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள், துறைகள், தங்களது முழு திறனை பயன்படுத்த வேண்டும் என்று அமைச்சர் வலியுறுத்தினார்.
பிரதமரின் விரைவு சக்தித் திட்டத்தின் ஒருங்கிணைந்த கட்டமைப்பைப் பயன்படுத்தி கூட்டுறவுத் துறைகள் மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் வாயிலாக, பொதுவான வசதிகளை அமைப்பதன் மூலம் வேளாண் துறைக்கு ஆதரவு அளிக்க முடியும் என்று அவர் கூறினார். நிதி ஆயோக்கின் முன்னோடி மாவட்டங்களுக்காக பிரதமரின் விரைவுச் சக்தித் திட்டத்தின் கீழ், குறிப்பிட்டப் பகுதி வளர்ச்சி அணுகுமுறையை பயன்படுத்த முடியும் என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
திவாஹர்