அமெரிக்க அதிபர் ஜோசப் பைடன், முதல் பெண்மணி டாக்டர். ஜில் பைடன் ஆகியோரின் அழைப்பின் பேரில் நான் அரசு முறைப் பயணமாக அமெரிக்காவுக்குச் சென்று கொண்டிருக்கிறேன். இந்த சிறப்பு அழைப்பு, நமது ஜனநாயக நாடுகளுக்கிடையிலான வீரியமான உயிர்ப்புமிக்க கூட்டாண்மையின் பிரதிபலிப்பாகும்.
நான் நியூயார்க்கில் இருந்து எனது பயணத்தைத் தொடங்குகிறேன், அங்கு நான் ஜூன் 21 அன்று ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில், ஐ.நா தலைவர்கள் மற்றும் சர்வதேச சமுதாயத்தினருடன் சர்வதேச யோகா தினத்தை கொண்டாடுகிறேன். 2014 டிசம்பர் மாதம் சர்வதேச யோகா தினத்தை அங்கீகரிக்க வேண்டும் என்ற இந்தியாவின் முன்மொழிவை ஆதரித்த இடத்தில் இந்த சிறப்பு கொண்டாட்டத்தை நான் எதிர்நோக்கியுள்ளேன்.
அதன்பிறகு நான் வாஷிங்டன் டி.சி.க்கு பயணம் செய்யவுள்ளேன். 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்காவுக்கு நான் மேற்கொண்ட அதிகாரப்பூர்வ பயணத்திற்குப் பின்னர் பலமுறை அதிபர் ஜோ பைடனை சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இந்தப் பயணம் எங்கள் கூட்டாண்மையின் வலிமையையும், பன்முகத்தன்மையையும் வளப்படுத்த ஒரு வாய்ப்பாக இருக்கும்.
இந்தியா-அமெரிக்க உறவுகள், துறைகள் தோறும் ஆழமான ஈடுபாடுகளுடன் கூடிய பன்முகத்தன்மை கொண்டவை ஆகும். பொருட்கள் மற்றும் சேவைகளில் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக பங்காளியாக அமெரிக்கா உள்ளது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு துறைகளில் நாம் நெருக்கமாக ஒத்துழைத்து வருகிறோம். சிக்கலான மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் மீதான முயற்சியானது பாதுகாப்பு தொழில்துறை ஒத்துழைப்பு, விண்வெளி, தொலைத்தொடர்பு, குவாண்டம், செயற்கை நுண்ணறிவு மற்றும் பயோடெக் துறைகளில் புதிய பரிமாணங்களையும் விரிவுபடுத்தப்பட்ட ஒத்துழைப்பையும் சேர்த்துள்ளது. தடையற்ற, வெளிப்படையான, உள்ளடக்கிய இந்தோ-பசிபிக் பிராந்தியம் பற்றிய நமது பகிரப்பட்ட பார்வையை மேலும் மேம்படுத்துவதற்கு இரு நாடுகளும் ஒத்துழைத்து வருகின்றன.
அதிபர் பைடன் மற்றும் பிற மூத்த அமெரிக்க தலைவர்களுடனான எனது கலந்துரையாடல்கள், நமது இருதரப்பு ஒத்துழைப்பை, ஜி20, குவாட் மற்றும் ஐபிஈஎஃப் போன்ற பலதரப்பு மன்றங்களிலும் ஒருங்கிணைப்பதற்கான வாய்ப்பை வழங்கும்.
அதிபர் பைடன் மற்றும் முதல் பெண்மணி டாக்டர். ஜில் பைடன், முக்கிய விருந்தினர்கள் ஆகியோருடன் அரசு விருந்தில் கலந்து கொள்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்திய-அமெரிக்க உறவுகளுக்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு கட்சிகளும் எப்போதும் வலுவான ஆதரவை வழங்கி வருகின்றன. எனது பயணத்தின் போது, நாடாளுமன்றத்தின் தலைமையின் அழைப்பின் பேரில் அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டு அமர்வில் நான் உரையாற்றவுள்ளேன்.
நமது இருநாடுகளுக்கும் இடையேயான நம்பிக்கையை வளர்ப்பதில் வலுவான மக்களுக்கு இடையிலான இணைப்புகள் கருவியாக உள்ளன. நமது சிறந்த சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் துடிப்பான இந்திய-அமெரிக்க சமூகத்தைச் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன். நமது வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவை மேம்படுத்துவதற்கும், நெகிழ்வுத்தன்மை கொண்ட உலகளாவிய விநியோகச் சங்கிலிகளை உருவாக்குவதற்குமான வாய்ப்புகள் குறித்து விவாதிக்க சில முன்னணி தலைமை நிர்வாக அதிகாரிகளை நான் சந்திக்கவிருக்கிறேன்.
எனது அமெரிக்கப் பயணம் ஜனநாயகம், பன்முகத்தன்மை மற்றும் சுதந்திரத்தின் பகிரப்பட்ட மதிப்புகளின் அடிப்படையில் நமது உறவுகளை வலுப்படுத்தும் என்று நான் நம்புகிறேன். பகிரப்பட்ட உலகளாவிய சவால்களை சந்திப்பதில் இரு நாடுகளும் ஒன்றாக வலுவாக நிற்கின்றன.
அதிபர் அப்தெல் ஃபத்தாஹ் எல்-சிசியின் அழைப்பின் பேரில் நான் வாஷிங்டன் டி.சி.யிலிருந்து கெய்ரோவுக்குச் செல்லவிருக்கிறேன். முதன்முறையாக நெருக்கமான மற்றும் நட்பு நாட்டிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
இந்த ஆண்டு குடியரசு தின விழாவில் பிரதம விருந்தினராக அதிபர் சிசியை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைந்தோம். சில மாத கால இடைவெளியிலான இந்த இரண்டு பயணங்களும் எகிப்து உடனான நமது வேகமாக வளர்ந்து வரும் கூட்டாண்மையின் பிரதிபலிப்பாகும், இது அதிபர் சிசியின் பயணத்தின் போது பாதுகாப்புத் தொடர்பான ஒத்துழைப்பாக உயர்த்தப்பட்டது.
நமது நாகரிக மற்றும் பன்முகக் கூட்டாண்மைக்கு மேலும் உத்வேகத்தை அளிக்க அதிபர் சிசி மற்றும் எகிப்திய அரசின் மூத்த உறுப்பினர்களுடனான எனது கலந்துரையாடல்களை எதிர்நோக்கியுள்ளேன். எகிப்தில் உள்ள துடிப்பான இந்திய வம்சாவளி மக்களுடன் உரையாடும் வாய்ப்பும் எனக்கு கிடைக்கவுள்ளது.
எஸ்.சதிஸ் சர்மா