பயணிகள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் அதிவேகமாக இயக்கப்படும் தனியார் பேருந்து நிறுவனங்களின் உரிமங்களை ரத்து செய்ய வேண்டும்! – நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தல்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே இரு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட கோரவிபத்தில் சிக்கி 4 பயணிகள் உயிரிழந்ததுடன், பலர் படுகாயமடைந்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மன வேதனையும் அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கிறேன். காயமடைந்தவர்கள் விரைந்து நலம்பெறவும் விழைகிறேன்.

அலட்சியமாகப் பேருந்தை இயக்கி இவ்விபத்து ஏற்பட காரணமானவர்களை தமிழ்நாடு அரசு உடனடியாக கைது செய்து கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும். மேலும், தமிழ்நாடு முழுவதும் பயணிகள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில், அதிவேகமாக இயக்கப்படும் தனியார் பேருந்துகளைக் கண்டறிந்து, அதன் ஓட்டுநர்கள் மற்றும் அப்பேருந்து நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமங்களை ரத்து செய்ய தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன். அத்தகைய கடும் நடவடிக்கைகள் மூலம் மட்டுமே, எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துகள் ஏற்படுவதையும், அவற்றில் சிக்கி அப்பாவி மக்கள் பலியாவதையும் தடுக்க முடியும்.

மேலும், இவ்விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு 50 லட்ச ரூபாய் துயர் துடைப்பு நிதியாக வழங்குவதுடன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டுமெனவும், காயமடைந்தவர்களுக்கு உரிய உயர் மருத்துவ சிகிச்சை அளிப்பதுடன், துயர் துடைப்பு நிதியாக 10 லட்ச ரூபாயும் வழங்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

எஸ்.திவ்யா

Leave a Reply