தமிழக அரசு சாலை வரியை உயர்த்த திட்டமிட்டிருப்பதை கைவிட வேண்டும்!-தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.

ஜி.கே.வாசன்.

தமிழக அரசு, சாலை வரியை உயர்த்த திட்டமிட்டிருப்பது ஏற்புடையதல்ல. ஏற்கனவே தமிழக அரசு, பல வரிகளை உயர்த்தி மக்கள் மீது பொருளாதார சுமையை ஏற்படுத்திய நிலையில் சாலை வரியையும் உயர்த்தி மக்கள் மீது கூடுதல் சுமையை ஏற்படுத்த வழி வகுக்கக்கூடாது சாலை வரியை உயர்த்த திட்டமிட்டிருப்பதை கைவிட வேண்டும்.

தமிழக அரசு, ஆட்சி முடியும் வரை எந்த வரியையும் உயர்த்த திட்டமிடக்கூடாது என்பது தான் தமிழக மக்களின் எதிர்பார்ப்பாகும்.ஏற்கனவே தமிழக அரசு உயர்த்திய சொத்து வரி, மின் கட்டணம், பால் பொருட்கள் விலை உள்ளிட்ட பலவற்றால் பொது மக்கள் குறிப்பாக ஏழை, எளிய, நடுத்தர மக்கள் தான் பெருமளவு பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் தமிழக அரசு, தற்போது சாலை வரியை உயர்த்த திட்டமிட்டிருப்பது ஏற்புடையதல்ல.அதாவது தமிழகத்தில் இரு சக்கர வாகனங்களுக்கு 8 சதவீதமும், கார்களுக்கு ரூ 10 லட்சத்திற்குள் இருந்தால் 10 சதவீதமும், அதற்கு மேல் இருந்தால் 15 சதவீதமும் சாலை வரியாக வசூலிக்கப்படுகிறது. இந்த சாலை வரி சதவீதத்தை உயர்த்த தற்போது தமிழக அரசு திட்டமிட்டு வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

தற்போது உள்ள சாலை வரியை விட கூடுதலாக 2 முதல் 5 சதவீதம் வரை வரி உயர்வு செய்யப்படும் என கூறப்படுகிறது. இது வாகனத்தை பொறுத்து மாறுபடும்.சாலை வரி உயர்த்தப்பட்டால் தமிழகத்தில் சாலை வரிகள் இருசக்கர வாகனங்களுக்கு ரூ1 லட்சம் வரை இருந்தால் அதற்கு 10 சதவீதமும், ரூ1 லட்சத்திற்கு மேல் இருந்தால் 12 சதவீதமும் சாலை வரியாக வசூலிக்கப்படலாம் என கூறப்படுகிறது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும்.

அதே போல கார்களுக்கு ரூ5 லட்சம் வரை சுமார் ரூ12 சதவீதமும், ரூ5 லட்சம் முதல் ரூ10 லட்சம் வரை சுமார் 13 சதவீதமும், ரூ10 லட்சம் முதல் ரூ20 லட்சம் வரை சுமார் 15 சதவீதமும், ரூ20 லட்சத்துக்கு மேல் சுமார் 20 சதவீதமும் சாலை வரி விதிக்க வாய்ப்பு இருக்கிறது. இந்த சாலை வரி உயர்வால் தமிழகம் முழுவதும் வாகனங்களின் விலை உயர வாய்ப்பிருக்கிறது. இது வாகனத்தை பொருத்து மாறுபடும்.

தமிழகத்தில் போக்குவரத்து துறை சார்பில் சாலை வரியில் நல்ல வருமானம் கிடைக்கிறது. இது போக வாகன ஓட்டிகள் தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும் போதும் சுங்க கட்டணம் செலுத்துகின்றனர். இப்படி சாலை வரி, சுங்கக் கட்டணம் ஆகியவற்றால் ஏற்கனவே வாகனம் வைத்திருப்பவர்களுக்கு சுமை இருக்கும் போது சாலை வரி உயர்வு நியாயமில்லை.
எனவே தமிழக அரசு சாலை வரியை உயர்த்த திட்டமிட்டிருப்பதை கைவிட வேண்டும் என்று த.மா.கா சார்பில் வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

எஸ்.திவ்யா

Leave a Reply