அனல் மற்றும் அனல் காற்றால் ஏற்படக் கூடிய நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள 7 மாநிலங்களில் சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து டாக்டர் மன்சுக் மாண்டவியா ஆய்வு செய்தார். காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்ற இக்கூட்டத்தில் உத்தரப்பிரதேசம், பீகார், ஒடிசா, ஜார்க்கண்ட், ஆந்திரப்பிரதேசம், சத்தீஷ்கர், தெலங்கானா மாநிலங்களின் சுகாதார அமைச்சர்கள், பேரிடர் மேலாண்மை அமைச்சர்கள், முதன்மை செயலாளர்கள், கூடுதல் தலைமைச் செயலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு கடும் வெப்ப அலையின் நிலையைக் குறித்து எடுத்துரைத்தனர். அப்போது பேசிய டாக்டர் மன்சுக் மாண்டவியா, மத்திய மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்படுவதன் மூலம் அனல் காற்றால் ஏற்படும் இறப்புகளை தவிர்ப்பதை உறுதி செய்ய முடியும் என்று தெரிவித்தார்.
மாநிலங்கள் தங்களது கருத்துக்கள், சிறந்த அனுபவ நடைமுறைகள் ஆகியவற்றை பகிர்ந்து கொள்வதன் மூலம் வெப்பத்தால் ஏற்படும் நோய்களைக் கட்டுப்படுத்த முடியும் என்று கூறினார். இது தொடர்பான எச்சரிக்கைகளை உரிய நேரத்தில் மக்களுக்கு அளிக்க வேண்டும் என்று வெப்ப அலையின் கடும் தாக்கத்தைத் தவிர்ப்பதற்கான தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
எஸ்.சதிஸ் சர்மா