விவசாயிகளுக்கு வருவாய் ஆதரவளிக்கும் வகையில், மத்திய அரசின் பிரதமரின் விவசாயிகள் வருவாய் ஆதரவுத் திட்டத்தின் கீழ், முக அங்கீகார அம்சத்துடன் கூடிய பிரதமரின் வேளாண் மொபைல் செயலியை மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் தொடங்கிவைத்தார். இதன் மூலம் விவசாயிகள் வீட்டில் இருந்தபடியே ஒரு முறை பயன்படுத்தும் கடவுச்சொல் அல்லது கைரேகையில்லாமல், மின்னணு வாயிலான வாடிக்கையாளர் விவரங்களை பூர்த்தி செய்ய முடியும். அத்துடன் மற்ற நூறு விவசாயிகளுக்கும் அவர் உதவமுடியும். இதன் மூலம் மாநில அரசு அதிகாரி ஒருவர், 500 விவசாயிகளின் மின்னணு வாயிலான வாடிக்கையாளர் விவரங்களை சரிபார்க்க முடியும்.
புதுதில்லியில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில், நாடு முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள், மத்திய, மாநில அரசு அதிகாரிகள், பல்வேறு அரசு அமைப்புகள் மற்றும் வேளாண் அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் காணொலிக் காட்சி வாயிலாக கலந்துகொண்டனர். அப்போது பேசிய திரு தோமர், பிரதமரின் வருவாய் ஆதரவுத் திட்டத்தின் மூலம் சுமார் 8.5 கோடி விவசாயிகளுக்கு தவணை முறையில் நிதியளிக்கப்படுவதாகக் கூறினார்.
இதன்மூலம் இடைத்தரகர்கள் தலையீடு இன்றி விவசாயிகளுக்கு மத்திய அரசு நிதியளிக்கிறது. இந்த தொழில்நுட்பத்தின் மூலம் பெரும் எண்ணிக்கையிலான விவசாயிகளுக்கு தற்போது உதவ முடிகிறது என்று அவர் தெரிவித்தார்.
திவாஹர்