மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை (தனிப் பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறை தீர்வு, ஓய்வூதியம், அணுசக்தி, விண்வெளித் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் GEMCOVAC® -OM, Omicron-specific mRNA அடிப்படையிலான எம்ஆர்என்ஏ அடிப்படையிலான ஜெம்கோவாக்® -ஓஎம் என்னும் ஓமிக்ரான் பூஸ்டர் தடுப்பூசியை அறிமுகப்படுத்தியுள்ளார்.
பயோடெக்னாலஜி துறை (டிபிடி) மற்றும் பயோடெக்னாலஜி இண்டஸ்ட்ரி ரிசர்ச் அசிஸ்டன்ஸ் கவுன்சில் (பிராக்) ஆகியவற்றின் நிதியுதவியுடன், ஜெனோவாவின் உள்நாட்டு இயங்குதள தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்தியாவின் முதல் எம்ஆர்என்ஏ தடுப்பூசி உருவாக்கப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பு, இந்த தடுப்பூசிக்கு அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்திற்கு இந்திய மருந்து தலைமை கட்டுப்பாட்டாளர் அலுவலகத்திலிருந்து அனுமதி கிடைத்தது.
” பிரதமரின் தற்சார்பு இந்தியா தொலைநோக்கு அடிப்படையில், இந்த உள்நாட்டு எம்ஆர்என்ஏ-பிளாட்ஃபார்ம் தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பம் சார்ந்த தொழில்முனைவோரை ஊக்குவிப்பதில் டிபிடி மீண்டும் தனது பணியை நிறைவேற்றுவதில் நான் பெருமிதம் கொள்கிறேன். அதற்கு ஏற்ப ‘எதிர்காலத் தயார்’ தொழில்நுட்ப தளத்தை உருவாக்குவதற்கான தொழில்நுட்பம் சார்ந்த கண்டுபிடிப்புகளை நாங்கள் எப்போதும் ஆதரித்து வருகிறோம். “என்று டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.
ஜெம்கோவாக்® -ஓஎம், கோவிட் பாதுகாப்பு மிஷன் ஆதரவுடன் உருவாக்கப்பட்ட ஐந்தாவது தடுப்பூசி ஆகும்.இந்த தடுப்பூசி ஊசி இல்லாமல் உள்-தோலுக்கு வழங்கப்படுகிறது. பங்கேற்பாளர்களில் இது அதிக நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கியது ஆய்வில் கண்டறியப்பட்டது.
டாக்டர் ஜிதேந்திர சிங் கூறுகையில், பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின் கீழ், கடந்த ஒன்பது ஆண்டுகளாக இந்திய தடுப்பூசி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை வலுப்படுத்த கடுமையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தற்சார்பு இந்தியா 3.0 இன் ஒரு பகுதியாக, திறமையான, மலிவு மற்றும் அணுகக்கூடிய உள்நாட்டு கோவிட் 19 தடுப்பூசிகளை நாட்டின் குடிமக்களுக்கு விரைவில் கொண்டு வரும் நோக்கத்துடன் பாதுகாப்பு மிஷன் தொடங்கப்பட்டது.
எம்.பிரபாகரன்