போதையை ஒழித்துப் புண்ணியம் தேடுங்கள்..!-இன்று சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினம்.

திருச்சி தேசியக் கல்லூரி மாணவ, மாணவிகள். (படங்கள்: UTL MEDIA TEAM)

சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, திருச்சி தேசியக் கல்லூரி மாணவ, மாணவிகள் சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று (26.06.2023) காலை நடைப்பெற்றது. இதில் காவல்துறை அதிகாரிகளும் பங்கேற்றனர்.

உலகம் முழுவதும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை 30 கோடிப் பேருக்கும் மேல் போதைப் பொருட்களுக்கு அடிமையாக இருப்பதாக கூறப்படுகிறது. மது மற்றும் புகையிலைப் பொருட்களை உபயோகிப்பது சர்வ சாதாரணமாகிவிட்ட நிலையில், கஞ்சா, அபின், கோகைன், பிரவுன்சுகர் ஆகியவை கரையான்புற்று போல் இளைஞர் சமூகத்தை அழித்து வருகின்றன.

போதைக்கு அடிமையான இளைஞர்கள் அவற்றை வாங்க பணம் கிடைக்காதபோது குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர் என்ற தகவல் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.

மனித குலத்தையே சீரழித்து வரும் ‘மது மற்றும் போதை’ எனும் அரக்கனை இங்கு முழுமையாக ஒழித்துக் கட்டாத வரை, இங்கு மக்கள் நிம்மதியாக வாழவும் முடியாது; சுதந்திரமாக நடமாடவும் முடியாது. குடும்ப பிரச்சனைகளுக்கும், குடும்ப வன்முறைகளுக்கும், சாலை விபத்துக்களுக்கும், சாதாரண மற்றும் கொடிய குற்றங்களுக்கும், சட்ட – ஒழுங்கு பிரச்சனைகளுக்கும், இங்கு நடக்கும் ஒட்டுமொத்த தீமைகளுக்கும், மதுவும்,போதைப் பொருட்களும் தான் முழுமையான காரணம்.

மது மற்றும் போதைப் பழக்கத்தால் நகர்ப்புற மற்றும் கிராமப்புற குடும்ப வாழ்வியல் சூழல் முற்றிலுமாக சிதைந்து சின்னா பின்னமாகி இருக்கிறது என்பதை நினைக்கும் போது உண்மையிலுமே நெஞ்சம் பதைக்கிறது. குடிகாரர்களின் குடும்ப வன்முறையால், உயிரிழப்பால், பெண்கள் மற்றும் குழந்தைகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் உள்ள மது ஆலைகளையும், மதுக் கடைகளையும் நஷ்ட ஈடு தராமல் உடனே மூடவேண்டும். காந்தி தேசத்தில் ஒரு சொட்டு மது கூட விற்பனை செய்யக்கூடாது. மருந்து மற்றும் இரசாயன பயன்பாட்டிற்கு மட்டும் தான் மதுவைப் பயன்படுத்தவேண்டும். அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உள்பட தேசிய அளவில் பூரண மதுவிலக்கை உடனே அமல்படுத்த வேண்டும். இதை வலியுறுத்தி நடைபெறும் அறப்போராட்டங்களில் பூரண மதுவிலக்கு கொள்கையில் மிக உறுதியாக இருக்கும் அரசியல் கட்சித் தலைவர்கள், பொது நல அமைப்புகள், மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் பெரும் திரளாகப் பங்கேற்கவேண்டும். அப்போதுதான் இந்தியா உண்மையான தூய்மை இந்தியாவாக மாறும்.

-Dr.துரைபெஞ்சமின், BAMS.,
M.A.,SOCIOLOGY,
Ex. Honorary A.W.Officer, Govt Of India,
Editor & Publisher,
www.ullatchithagaval.com
Director, UTL MEDIA OPC PVT LTD,
Mobile No.98424 14040

Leave a Reply