போபாலில்உள்ள ராணி கமலாபதி ரயில்நிலையத்தில் 5 புதிய வந்தே பாரத் விரைவு ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோதி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பிரதமர் நரேந்திர மோதி 5 புதிய மற்றும் அதிநவீன வசதிகளுடன் கூடிய வந்தே பாரத் விரைவு ரயில்களை போபாலின் ராணி கமலாபதி ரயில்நிலையத்தில் கொடியசைத்து துவக்கி வைத்த  இன்றைய தினம் இந்திய ரயில்வே-க்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாளாக மாறியிருக்கிறது.  இந்த நிகழ்ச்சியில் மத்தியப்பிரதேச ஆளுநர் திரு மங்குபாய்  படேல், முதலமைச்சர் திரு ஷிவ்ராஜ் சிங் சவுகான், மத்திய ரயில்வே, எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

ராணி கமலாபதி–ஜபல்பூர், ராணி கமலாபதி- இந்தூர், கோவா(மட்கான்) -மும்பை, ராஞ்சி-பாட்னா மற்றும் தார்வாட் – பெங்களூரு இடையே இயக்கப்படும் 5 புதிய வந்தே பாரத் விரைவு ரயில்கள்,  சொகுசு மற்றும் உற்சாகமான பயணத்தை அளிக்கும் புதிய சகாப்தத்தை உருவாக்கியுள்ளது.  

இன்று தொடங்கிவைக்கப்பட்டுள்ள வந்தே பாரத் ரயில்கள் மாநில தலைநகர் உட்பட பல்வேறு நகரங்களுக்கு இடையேயான ரயில் இணைப்பை மேம்படுத்துவதுடன், பயண நேரத்தைக் குறைத்து சொகுசானப் பயண அனுபவத்தையும் பயணிகளுக்கு வழங்குகிறது.  வந்தே பாரத் ரயில்கள் நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் வளர்ந்த இந்தியா என்ற கருத்தைத் தாங்கி நிற்கின்றன. 

ராணி கமலாபதி – ஜபல்பூர் வந்தே பாரத் ரயில்

ராணி கமலாபதி – ஜபல்பூர் இடையேயான வந்தே பாரத் விரைவு ரயில் ராணி கமலாபதி ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு ஜபல்பூர் ரயில் நிலையத்தை அடைகிறது.  இந்த ரயில் நரசிங்பூர், பிப்பரியா நர்மதாபுரம் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

ராணி கமலாபதி – இந்தூர் வந்தே பாரத் விரைவு ரயில்

ராணி கமலாபதி – இந்தூர் வந்தே பாரத் விரைவு ரயில் போபால் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு இந்தூர் ரயில்நிலையத்தை அடைகிறது. இந்த ரயில் உஜ்ஜய்ன் ரயில் நிலையத்தில் நின்று செல்லும். மத்தியப் பிரதேசத்தில் இந்த இரண்டு முக்கியமான நகரங்களுக்கு இடையே விரைவான பயணத்திற்கு வழிவகுக்கும் இந்த ரயில், அந்தப் பிராந்தியத்தில் கலாச்சாரம், சுற்றுலா மற்றும் ஆன்மீகத் தலங்களுக்கான இணைப்பை மேம்படுத்தும்.

கோவா (மட்கான்) – மும்பை வந்தே பாரத் விரைவு ரயில்

கோவா (மட்கான்) – மும்பை வந்தே பாரத் விரைவு ரயில் கோவாவின் முதல் வந்தே பாரத் ரயிலாகும். மும்பை சத்ரபதி சிவாஜி மகராஜ் முனையத்திற்கும், கோவாவின் மட்கான் ரயில் நிலையத்திற்கும் இடையே இயக்கப்படும் இந்த ரயில் கோவா மற்றும் மத்தியப் பிரதேசத்தில் சுற்றுலாவை மேம்படுத்த இந்த ரயில் உதவும்.

ராஞ்சி – பாட்னா வந்தே பாரத் விரைவு ரயில்

ராஞ்சி – பாட்னா வந்தே பாரத் விரைவு ரயில் ஜார்க்கண்ட் மற்றும் பீகாரின் முதல் வந்தே பாரத் ரயிலாகும். இது பாட்னாவுக்கும், ராஞ்சிக்கும் இடையே ரயில் போக்குவரத்து இணைப்பை அதிகரிக்கும். சுற்றுலாப் பயணிகள், மாணவர்கள் மற்றும் தொழில் முனைவோருக்கு இந்த ரயில் வரப்பிரசாதமாகும்.

தார்வாட் – பெங்களூரு வந்தே பாரத் விரைவு

தார்வாட் – பெங்களூரு வந்தே பாரத் விரைவு ரயில் கர்நாடக மாநிலத்தின் தார்வாட், ஹூப்பள்ளி, தாவனகரே ஆகிய முக்கிய சுற்றுலா நகரங்களை தலைநகர் பெங்களூருவுடன் இணைக்கும் இந்த ரயில் மூலம், அந்தப் பிராந்தியத்தின் சுற்றுலாப் பயணிகள், மாணவர்கள், தொழில் முனைவோர் ஆகியோர் பயனடைவார்கள்.

திவாஹர்

Leave a Reply