பகுதிநேர ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்!-தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.

தமிழகத்தில் கல்வித்துறையில் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் குறைந்த சம்பளத்தில் பணிபுரிந்து வருகிறார்கள். நீண்டகாலமாக ஆர்ப்பாட்டம், போராட்டத்தின் மூலம் தங்கள் கோரிக்கைகளை அரசிற்கு தெரிவித்து வருகின்றனர்.

அரசு பள்ளிகளில் கணினி, ஓவியம், உடற்கல்வி, இசை, தையல், தோட்டக்கலை, வாழ்வியல்திறன் போன்ற பாடங்களை நடத்தும் ஆசிரியர்கள் தமிழகம் முழுவதும் 12 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர். அவர்களுக்கு மாத ஊதியமாக ரூபாய் 10 ஆயிரம் வழங்கப்படுகிறது. தற்பொழுது நிலவும் விலைவாசி உயர்வில் குறைந்த சம்பளத்தில் தங்கள் குடும்பத்தை நடத்த இயலாமல் மிகவும் தவிக்கின்றார்கள்.

இந்நிலையில் கல்வித்துறை, பகுதிநேர ஆசிரியராக பணிபுரிபவர்களுக்கு மே மாதம் சம்பளம் அளிக்கப்படுவதில்லை. இதனால் அவர்கள் குடும்பத்தில் அனைவரும் பாதிக்கப்படுகிறார்கள். தமிழக அரசு மனிதாபிமானத்துடன் அவர்களின் நிலையறிந்து மே மாதத்திற்கும் சம்பளம் வழங்க வேண்டும்.

மண் வளமாக இருந்தால் பயிர் செழித்து வளரும், அது போல் ஆசிரியர்கள் நலமாக இருந்தால் மாணவர்கள் சிறப்பாக பயில முடியும். ஆகவே பகுதிநேர ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளான, பணிநிரந்தரம், சம்பள உயர்வு, பணியின் போது இறந்த ஆசிரியர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 3 லட்சம் நிதியுதவி, அனைத்து மாதங்களுக்கும் சம்பளம், போன்ற பல்வேறு நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசும், கல்வித்துறையும் பரிசீலனை செய்து நிறைவேற்ற வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் ஜி.கே.வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

எஸ்.திவ்யா

Leave a Reply