மேகேதாட்டு, பெண்ணையாற்று அணைகள் கட்ட கர்நாடகம் முனைந்திருப்பது அநீதி!-மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம்.

கர்நாடக மாநில துணை முதல்வரும், நீர்ப்பாசனத் துறை அமைச்சருமான டி.கே.சிவகுமார் டெல்லியில் ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷேகாவத்தைச் சந்தித்து மேகதாட்டு அணை கட்டும் திட்டத்திற்கு ஒன்றிய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார்.

மேலும், இதுகுறித்து அவர் ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சரிடம் அளித்துள்ள கடிதத்தில், கர்நாடக அரசின் நீர்ப் பாசனத் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழ்நாடு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும், நதிநீர்ப் பங்கீடு பிரச்சினைக்கு புதிதாக ஒரு தீர்ப்பாயத்தை ஏற்படுத்தும் முயற்சியை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டதாக பத்திரிக்கைகளில் செய்திகள் வந்துள்ளன.

நேற்று ஜூன் 30 ஆம் தேதி டில்லியில், இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டி.கே.சிவகுமார், தமிழகத்துடனான பெண்ணையாறு நதிநீர்ப் பங்கீடுப் பிரச்சனையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க கர்நாடகா விரும்புகிறது; அதற்கு நடுவர் மன்றம் அமைக்கக் கூடாது என்று ஒன்றிய அரசை தாம் வலியுறுத்தியதாக கூறி உள்ளார்.

ஜூலை 5-ஆம் தேதிக்குள் மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் தகராறு தீர்ப்பாயத்தை அமைக்க மத்திய நீர் வளத்துறை அமைச்சகம் முடிவெடுத்துள்ள நிலையில்,

“பெண்ணையாறு நதி நீர்ப் பங்கீடு பிரச்சனைக்கு தீர்ப்பாயம் அமைக்க வேண்டாம் என மத்திய அமைச்சரிடம் (கஜேந்திர சிங் ஷெகாவத்) கோரிக்கை விடுத்துள்ளேன். கர்நாடகா இந்தப் பிரச்சனையை பேச்சுவார்த்தை மூலம் சுமுகமாக தீர்க்க விரும்புகிறது” என டி.கே.சிவகுமார் கூறி உள்ளார்.

பெண்ணை ஆறு பிரச்சனையில், தீர்ப்பாயம் அமைக்கக் கோரி தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருக்கிறது. ஆனால் கர்நாடகா அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

தீர்ப்பாயம் அமைக்கக் கோரி தமிழகம் தாக்கல் செய்த மனுவில் ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சகம் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்துமாறு உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது.

அதற்கு பதில் அளித்த ஒன்றிய நீர்வள அமைச்சகம் ஜூலை 5ஆம் தேதிக்கு முன் புதிய தீர்ப்பாயம் அமைக்கப்படும் என்று கூறி உள்ளது.

கோலார் மாவட்டத்தில் உள்ள யர்கோல் கிராமம் அருகே மார்கண்டேய ஆற்றின் குறுக்கே கோலார், மாலூர் மற்றும் பங்கார்பேட்டை வட்டங்கள் மற்றும் 40 கிராமங்களுக்கு குடிநீர் வழங்க, கர்நாடகா அணை கட்ட திட்டமிட்டுள்ளது. 240 கோடி ரூபாய் செலவில் பெண்ணையாற்றின் குறுக்கே அணை கட்ட தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது.

ஆனால், இந்தத் திட்டத்துக்கு தமிழ்நாடு அரசு எதிர்ப்புத் தெரிவித்ததுடன், பெண்ணையாற்றின் கிளை நதியாக மார்கண்டேய நதி இருப்பதால், கர்நாடகா அணை கட்டுவது அதன் இயற்கையான நீரோட்டத்திற்குத் தடையாக இருக்கும் என்றும், வர்தூர் குளத்தின் உபரி நீரை திருப்பி மார்கண்டேய ஆற்றின் குறுக்கே நீர்த்தேக்கம் கட்டும் பணியை கர்நாடகா மேற்கொண்டுள்ளது என்றும் தமிழ்நாடு அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பெண்ணையாற்றின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டுவது வடதமிழ்நாட்டைப் பெரிதும் பாதிக்கும். இப்பிரச்சனையில் தீர்ப்பாயம் மூலம் தீர்வு காண வேண்டுமே தவிர கர்நாடக மாநிலத்தோடு பேச்சுவார்த்தை நடத்தக் கூடாது.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாட்டு அணை கட்டுவதில் தீவிரம் காட்டி வரும் கர்நாடக அரசு, பெண்ணை ஆற்று தண்ணீரையும் தடுக்க முனைந்திருப்பது அநீதியானதும், வன்மையான கண்டனத்துக்கு உரியதும் ஆகும்.

உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு, மேகேதாட்டு அணை மற்றும் பெண்ணையாற்று அணை தொடர்பான வழக்குகளை துரிதப்படுத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

எஸ்.திவ்யா

Leave a Reply