கழிவுகளை மனிதர்களே அகற்றும் தடுப்பு சட்டம் 2013-ன் அமலாக்கம் குறித்து ஆய்வு செய்ய மத்திய கண்காணிப்பு குழுவின் 8-வது கூட்டத்திற்கு சமூகநீதி மற்றும் அதிகாரம் அளித்தல் அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்தது.

புதுதில்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் நடைபெற்ற மத்திய கண்காணிப்பு குழுவின் 8-வது கூட்டத்திற்கு மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை அமைச்சர்  டாக்டர் வீரேந்திர குமார் தலைமை தாங்கினார்.

 கழிவுகளை மனிதர்களே அகற்றுவதை  தடுத்தல் மற்றும்  பணியாளர்களின் மறுவாழ்வு சட்டம் 2013-ன் அமலாக்கம் குறித்து  இக்கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.  இந்த முக்கிய மத்திய சட்டம் 2013  செப்டம்பர் மாதம் நாடாளுமன்றத்தில்  இயற்றப்பட்டு 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைமுறைக்கு வந்தது. அதன்படி கழிவுகளை மனிதர்களே அகற்றுவதை முற்றிலுமாக களைதல் மற்றும் அவர்களுக்கான விரிவான  மறுவாழ்வு ஆகியவற்றை நோக்கமாக கொண்டு இச்சட்டம் இயற்றப்பட்டது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை இணையமைச்சர் திரு ராம்தாஸ் அத்வாலே, மத்திய அமைச்சகங்கள், துறைகள், ஆணையங்களின் பிரதிநிதிகள்,  மாநிலங்களின் முதன்மை செயலாளர்கள், செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில்  சுகாதாரமற்ற கழிப்பறைகள் குறித்த தரவுகள் மற்றும் கழிவுகளை மனிதர்களே அகற்றுவோர் தொடர்புடைய தரவுகள் குறித்த ஸ்வச்சதா அபியான் என்ற மொபைல் செயலி குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த செயலி மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரம் அளித்தல் அமைச்சகத்தால் 24.12.2020 அன்று தொடங்கப்பட்டது. இந்த செயலியை கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து கட்டணமின்றி பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். சுகாதாரமற்ற கழிப்பறைகள் அல்லது மனிதர்களே கழிவுகளை அகற்றுதல் குறித்த தகவல்களை  யார் வேண்டுமானாலும் இந்த செயலியில் பதிவேற்றம் செய்யலாம் என்பதை குழு கருத்தில் கொண்டது. கடந்த 3 ஆண்டுகளில் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஒவ்வொரு தகவல்களும் தனித்தனியாக விசாரிக்கப்பட்டதில், சுகாதாரமற்ற கழிப்பறைகள் அல்லது மனிதர்களே கழிவுகளை அகற்றியதற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்று குழு திருப்தி தெரிவித்தது.

எம்.பிரபாகரன்

Leave a Reply