கரும்பு கொள்முதல் ஆதார விலை மற்றும் ஊக்கத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்!- மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தல்.

தமிழகத்தில் 1.5 லட்சம் விவசாயக் குடும்பங்கள் கரும்பு சாகுபடி செய்து வருகின்றனர். சர்க்கரை துறையைச் சார்ந்த தொழில் மூலம் நேரடியாகவும் மற்றும் மறைமுகமாகவும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் பயன் அடைகின்றனர்.

2005-06 அரவைப் பருவத்தில் 232 லட்சம் மெட்ரிக் டன்னுக்கு மேல் கரும்பு சாகுபடி செய்யப்பட்டு வந்தது. ஆனால் தற்போது படிப்படியாக குறைந்து 2021- 22 அரவைப் பருவத்தில் 128 லட்சம் மெட்ரிக் டன் கரும்பு மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

தமிழக விவசாயிகள் வறட்சி, புயல், வெள்ளம், பூச்சி நோய் போன்ற பல்வேறு இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்பட்டு மகசூல் இழப்பைச் சந்தித்து வருகிறார்கள்.

இதில் குறிப்பாக கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழக விவசாயிகள் புதுவகையான பூச்சி மற்றும் நோய் தாக்குதலால் கரும்பு பயிரில் கடுமையான மகசூல் இழப்பினைச் சந்தித்து வருகிறார்கள்.

இதற்கு விஞ்ஞான ரீதியான கட்டுப்பாடு முறைகளும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு மூலம் நிவாரணமும் வழங்க வேண்டும்.

தமிழக அரசால் வழங்கப்படும் கரும்பு பயிர் காப்பீடு திட்டம் மூலம் அனைத்து மாவட்ட விவசாயிகளும் பயன் பெறும் வகையில் வேளாண்மை துறையியின் காப்பீட்டுத் திட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும்.

நமது மாநிலத்தில் சர்க்கரை தேவை 15 லட்சம் மெட்ரிக் டன்கள். ஆனால் 10 லட்சம் மெட்ரிக் டன்கள் சர்க்கரை மட்டுமே தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது.

ஒன்றிய அரசு அண்மையில் கரும்புக்கான அடிப்படை ஆதார விலையை 10.25 சர்க்கரை கட்டுமானத்திற்கு குவின்டால் ஒன்றுக்கு ரூபாய் 10 உயர்த்தி, டன் ஒன்றுக்கு ரூபாய் 3150 என விலை அறிவித்திருக்கிறது.

ஆனால் தமிழ்நாட்டில் சர்க்கரை கட்டுமானம் என்பது 9.5 மற்றும் அதற்கு குறைவாகவே உள்ளது.

கடந்த 2021-22 அரவைப் பருவத்தில் ஒன்றிய அரசு அறிவித்த 3050 ரூபாய் விலையில் தமிழக விவசாயிகளுக்கு 9.5 சர்க்கரை கட்டுமானத்திற்கு கிடைத்த தொகை 2821. 25 ரூபாய் மட்டுமே. மாநில அரசாங்கம் கடந்த ஆண்டு 195 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கியது.

(2821.25+195=3016.25) ஆனால் தற்போது ஒன்றிய அரசு ஒரு குவின்டால் கரும்பிற்கு 10 ரூபாய் மட்டும் உயர்த்தி அறிவித்திருக்கிறது.

இது கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களில் இருக்கும் விவசாயிகளுக்கு வேண்டுமானால் பயனுள்ளதாக இருக்கலாம். காரணம் கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் சர்க்கரை கட்டுமானம் என்பது மத்திய அரசாங்கம் அறிவித்திருக்கும் 10.25 க்கு அதிகமாக வருகிறது.

ஒன்றிய அரசு அறிவித்துள்ள குவின்டால் ஒன்றுக்கு 10 ரூபாய் என்பதனை உயர்த்தி 50 ரூபாயாக வழங்குவதற்கும் குறைந்தபட்ச கட்டுமானம் 9.5 என்பதனை மாற்றி அமைக்கவும் ஒன்றிய அரசை வலியுறுத்துகிறேன்.

தமிழ்நாட்டில் சர்க்கரை கட்டுமானம் 9.5 தான் தொடர்ந்து கடந்த பத்து ஆண்டுகளாக கிடைக்கிறது. இந்தப் பாதிப்புக்கு விவசாயிகள் எந்த வகையிலும் காரணம் இல்லை. இயற்கையின் இடர்பாடுகள் மற்றும் பருவநிலை மாற்றம் தான் காரணம்.

இதனால் ஒன்றிய அரசு அறிவிக்கும் விலை தமிழக விவசாயிகளுக்கு கிடைக்காமல், தமிழக கரும்பு விவசாயிகள் கரும்பு பயிரிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறி மாற்றுப் பயிர் சாகுபடிக்கு மாறி வரும் நிலை உருவாகி வருகிறது.

இதனை தடுத்து நிறுத்த வேண்டும். மேலும் தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 42 சர்க்கரை ஆலைகளில் தற்போது 29 மட்டுமே இயங்கி வருகின்றன.

போதுமான கரும்பு உற்பத்தி இல்லாமையால் பல ஆலைகள் நலிவடைந்து மூடும் சூழ்நிலையில் உள்ளது.

கடந்த ஆண்டுகளில் வழங்கிய ஊக்கத்தொகை 195 ரூபாய் என்பதனை உயர்த்தி 500 ரூபாயாக அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசையும் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சி.கார்த்திகேயன்

Leave a Reply