தேனி மக்களவை தேர்தலில் ப.ரவீந்திரநாத் குமார் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தின் உண்மை நகல்.
தேனி மக்களவை தேர்தலில் ப. ரவீந்திரநாத் குமார் பெற்ற வெற்றி செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலிலின்போது ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் தேனி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டார். இந்த தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஈவிகேஎஸ் இளங்கோவனைவிட 76,319 வாக்குகள் அதிகம் பெற்று ப. ரவீந்திரநாத் குமார் வெற்றிபெற்றார்.
இந்நிலையில், ப. ரவீந்திரநாத் குமாரின் வெற்றி செல்லாது என்று அறிவிக்கக் கோரி தேனியைச் சேர்ந்த மிலானி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
அதில், ப. ரவீந்திரநாத் குமார் பிரமாணப் பத்திரத்தில் சொத்து விவரங்கள், கடன் விவரங்கள் குறித்த விவரங்களை மறைத்துள்ளார்.
பணப்பட்டுவாடா புகாரின் பேரில், வேலூர் தொகுதி தேர்தல் தள்ளிவைக்கப்பட்ட நிலையில், தேனி தொகுதியிலும் அதிக பணப்பட்டுவாடா நடந்தும், தேர்தல் தள்ளிவைக்கப்படவில்லை,” என்று தெரிவித்திருந்தார்.
இதனிடையே, தனக்கு எதிரான இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல. எனவே, வழக்கை ஏற்கக்கூடாது என்று ப. ரவீந்திரநாத் குமார் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
ப. ரவீந்திரநாத் குமாரின் மனுவை கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், குற்றச்சாட்டுக்கு ஆரம்பகட்ட முகாந்திரம் இருப்பதாகக் கூறி அவரது மனுவை தள்ளுபடி செய்தார்.
இதைத் தொடர்ந்து நீதிபதி எஸ்.எஸ். சுந்தர் தலைமையில் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தது. வழக்கு தொடர்பாக ஏற்கெனவே, ப. ரவீந்திரநாத் குமார் மூன்று நாட்கள் நேரில் ஆஜராகி தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து சாட்சியம் அளித்தார்.
இதேபோல், தேர்தல் ஆணைய அதிகாரிகள் உள்ளிட்டோரும் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தனர்.
அமமுக சார்பில், 2019 மக்களவைத் தேர்தலில் தேனியில் போட்டியிட்ட தங்கத்தமிழ் செல்வன், இந்த வழக்கில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.
அனைத்து தரப்பு வாதங்களும் கடந்த ஏப்ரல் மாதம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து; தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், வழக்கு தொடர்பாக சில விளக்கங்களை நீதிபதி கேட்டிருந்தார். இதையடுத்து, ஜூன் 28ஆம் தேதி ப. ரவீந்திரநாத் குமார் மீண்டும் நேரில் ஆஜராகி கூடுதல் ஆவணங்களைத் தாக்கல் செய்தார்.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எஸ். சுந்தர், ` 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் ப. ரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்றது செல்லாது` என்று உத்தரவிட்டார். தேனி மக்களவைத் தொகுதியில் நடந்த தேர்தல் செல்லாது என்றும் உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
எனினும் தீர்ப்பு தொடர்பாக ப. ரவீந்திரநாத் குமார் மேல்முறையீடு செய்வதற்காக உத்தரவை 30 நாட்களுக்கு உயர் நீதிமன்றம் நிறுத்தி வைக்க வேண்டும் என்று ப. ரவீந்திரநாத் குமாரின் வழக்கறிஞர் ஏ.கே.ஸ்ரீராம் கோரிக்கை வைத்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி 30 நாட்களுக்குத் தனது தீர்ப்பை நிறுத்தி வைப்பதாக அறிவித்தார்.
தனது தீர்ப்பில், ‘வழக்கு விசாரணையின்போது மூத்த வழக்கறிஞர் ரூ.3,17,49,280க்கு பதிலாக ரூ.36,52,450 என்று தவறுதலாக குறிப்பிடப்பட்டுவிட்டது என்று குறிப்பிட்டார்.
வேறு வழக்காக இருந்தால் இந்த விளக்கத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டிருக்கும். இதேபோல், வட்டிக்கு விடுவது மூலம் கிடைத்த வருவாய், ரியல் எஸ்டேட் தொழில் மூலம் கிடைத்த லாபம் ஆகியவை குறித்து வேட்பாளர் மறைத்துள்ளார்.
தனது அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ.4.16,27,224 என்று வேட்பாளர் கூறியுள்ளார். ஆனால், ரூ.1,35,30,394 என்று மட்டுமே அவர் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார்,” என்றும் நீதிபதி எஸ்.எஸ். சுந்தர் தெரிவித்துள்ளார்.
-Dr.துரைபெஞ்சமின், BAMS.,
M.A.,SOCIOLOGY,
Ex. Honorary A.W.Officer, Govt Of India,
Editor & Publisher,
www.ullatchithagaval.com
Director, UTL MEDIA OPC PVT LTD,
Mobile No.98424 14040