பாஸ்டில் தின அணிவகுப்பில் பங்கேற்பதற்காக இந்திய முப்படை வீரர்கள் பிரான்ஸ் புறப்பட்டனர்.

ஜூலை 14-ம் தேதி பிரான்சின் தேசிய தினமாகக் கொண்டாடப்படுகிறது. 1789-ம் ஆண்டு பிரெஞ்சுப் புரட்சியின் போது பாஸ்டில் சிறை தகர்க்கப்பட்டதன் நினைவு தினம் என்பதால் இது பாஸ்டில் தினம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டு, பாஸ்டில் தின அணிவகுப்பில் பங்கேற்க இந்தியப் பிரதமர் திரு.நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளார். இந்த அணிவகுப்பில், இந்தியாவின் முப்படைகளைச் சேர்ந்த 269 வீரர்கள் பிரெஞ்சு வீரர்களுடன் இணைந்து பங்கேற்கவுள்ளனர். இந்த குழு இன்று பிரான்ஸ் சென்றுள்ளது.

இந்திய மற்றும் பிரெஞ்சு ராணுவங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பு முதலாம் உலகப் போருக்கு முந்தையதாகும். 13 லட்சத்துக்கும் அதிகமான இந்திய வீரர்கள் இப்போரில் கலந்து கொண்டனர், அவர்களில் கிட்டத்தட்ட 74,000 பேர் சேற்று அகழிகளில் சிக்கி உயிரிழந்தனர். 67 ஆயிரம் பேர் காயமடைந்தனர். பின்னர் 2-ம் உலகப் போரில் 25  இந்திய வீரர்கள் பங்கேற்றனர்.

இந்தியா – பிரான்ஸ் இடையேயான ராணுவ உறவு இந்த ஆண்டு 25-வது ஆண்டைக் கொண்டாடுகிறது. இரு நாட்டு ராணுவ வீரர்களும் கூட்டுப் பயிற்சியில் பங்கேற்று தங்களது அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர்.

77 அணிவகுப்பு வீரர்கள் மற்றும் 38 இசைக்குழு உறுப்பினர்களைக் கொண்ட இந்திய ராணுவக் குழுவிற்கு கேப்டன் அமன் ஜக்தாப் தலைமை தாங்குகிறார். இந்திய கடற்படைக் குழுவிற்கு கமாண்டர் விராட் பாகெலும், இந்திய விமானப் படைக்கு ஸ்க்வாட்ரன் தலைவர் சிந்து ரெட்டியும் தலைமை தாங்குகின்றனர். இந்திய விமானப் படையின் ரஃபேல் போர் விமானங்களும் பங்கேற்கவுள்ளன.

திவாஹர்

Leave a Reply