சென்னையை அடுத்த நெம்மேலி பகுதியில் உள்ள ஆயிரம் காணி ஆளவந்தார் நாயகர் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலங்களை, ஆளவந்தார் நாயகரின் நோக்கங்களுக்கு மாற்றாக, தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சிகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், அவற்றை இறைபணி தவிர்த்து வன்னியர்களின் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் வாழ்நிலை மேம்பாட்டுக்கான திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார். ஆளவந்தார் அறக்கட்டளையின் சொத்துகள் தாரை வார்க்கப்பட்டால், அதை தமிழகம் இதுவரை காணாத வகையில் வன்னியர்கள் போராடுவார்கள்; அதற்கு தமிழக அரசு வழிவகுத்து விடக்கூடாது என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மருத்துவர் அய்யா கடிதம் எழுதியுள்ளார். அதன் விவரம்:
அன்புள்ள தமிழக முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு,
வணக்கம்!
பொருள்: ஆயிரம் காணி ஆளவந்தார் நாயகர் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலங்களை, ஆளவந்தார் நாயகரின் நோக்கங்களுக்கு மாற்றாக, தனியாருக்கு தாரை வார்க்க நடக்கும் முயற்சிகளை தடுத்து நிறுத்தக் கோருதல் – தொடர்பாக
இறைபணி, மிக, மிக பிற்படுத்தப்பட்ட நிலையில் உள்ள வன்னியர் மக்களின் கல்வி மற்றும் முன்னேற்றத்திற்கான நடவடிக்கைகள் ஆகியவற்றுக்காக ஆயிரம் காணி ஆளவந்தார் நாயகரால் வழங்கப்பட்ட அவரது சொத்துகளை, முதலமைச்சரின் முத்திரைத் திட்டங்கள் என்ற பெயரை பயன்படுத்தி தனியார் நிறுவனங்களுக்கு தாரை வார்க்க நடைபெறும் முயற்சிகள் குறித்து தங்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக முதலமைச்சராகிய உங்களுக்கு இந்தக் கடிதத்தை நான் எழுதுகிறேன்.
செங்கல்பட்டு மாவட்டம் நெம்மேலியில் வன்னியர் குல சத்திரிய மரபில் வெங்கடபதி நாயகர்- அகிலாண்டம்மாள் இணையருக்கு மகனாக 1835-ஆம் ஆண்டில் பிறந்த ஆளவந்தார் நாயகர், அவரது கடுமையான உழைப்பால் சேர்த்த 1550 ஏக்கர் நிலங்களை இறைபணிக்காக வழங்கினார். அவரது பெயரில் செயல்பட்டு வரும் அருள்மிகு ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமாக இப்போது 1054 ஏக்கர் நிலம் உள்ளது. ஆளவந்தார் எழுதி வைத்த நிலங்கள், அவரால் குறிப்பிடப்பட்ட இறைபணிக்கான தேவையை விட பல மடங்கு அதிகம் என்பதால், அவற்றை வேறு பணிகளுக்காக பயன்படுத்தலாமா? என்ற வினா எழுந்த போது, அவற்றைக் கல்விப் பணிக்காக பயன்படுத்தலாம் என்று நீதியரசர் சேஷாத்ரி அய்யர் தலைமையிலான சென்னை உயர்நீதிமன்ற அமர்வு கடந்த 1918-ஆம் ஆண்டு ஏப்ரல் 25-ஆம் நாள் தீர்ப்பளித்தது. அதற்கு எதிரான செயல்பாடுகளை அனுமதிக்க முடியாது.
ஆனால், ஆயிரம் காணி ஆளவந்தார் நாயகர் அறக்கட்டளையின் கீழ் வரும் சொத்துகளை, அவரது நோக்கங்களுக்கு எதிரான செயல்களுக்கு பயன்படுத்தும் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதற்கான அண்மைக்கால எடுத்துக்காட்டுகள் சிலவற்றை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
- பட்டிப்புலம் பகுதியில் புல எண் 168/24, பட்டா எண் 12-இல் உள்ள 60 ஏக்கர் நிலத்தை மாத வாடகை 22.02 லட்சம் என்ற தொகைக்கு தனியார் நிறுவனங்களுக்கு 5 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான ஏலம் வரும் 20.07.2023-ஆம் நாள் மாமல்லபுரத்தில் உள்ள அறக்கட்டளை அலுவலகத்தில் நடைபெறும் என்று ஆளவந்தார் அறக்கட்டளையை நிர்வகித்து வரும் இந்து சமய அறநிலையத்துறை அறிவித்திருந்தது. எதிர்ப்பைத் தொடர்ந்து இந்த ஏலம் ஒத்திவைக்கப்பட்டுள்ள போதிலும் ரத்து செய்யப்படவில்லை.
- சட்டப்பேரவையில் தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் கூடிய அதிநவீன திரைப்பட நகரம் அமைப்பதற்காக, நெம்மேலியில் உள்ள ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான புல எண்கள் 30, 31, 33, 195/2ஏ, 196, 212 ஆகியவற்றில் உள்ள 11.67 ஹெக்டேர் (29.175 ஏக்கர்) நிலத்தை நீண்டகால குத்தகைக்கு எடுக்க செய்தி மற்றும் விளம்பரத்துறை முடிவு செய்துள்ளது. சம்பந்தப்பட்ட நிலத்தை நீண்டகால குத்தகை அடிப்படையில் தங்களுக்கு வழங்கும்படி இந்து சமய அறநிலையத்துறை ஆணையாளர் க.வீ. முரளிதரன் அவர்களுக்கு செய்தி – விளம்பரத்துறை இயக்குனர் த.மோகன் அவர்கள் கடந்த 27.06.2023 அன்று நேர்முகக் கடிதம் (கடித எண்: 3410) எழுதி அனுப்பியிருக்கிறார்.
முதல்கட்டமாக 29.175 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு பெற்று அடுத்தக்கட்டமாக மேலும் 70.825 ஏக்கர் நிலங்களை குத்தகைக்கு பெற செய்தி விளம்பரத்துறை திட்டமிட்டிருக்கிறது. அதன்படி திரைப்பட நகரத்திற்கு மட்டுமே 100 ஏக்கர் நிலம் எடுக்கப்படும் எனத் தெரிகிறது.
- நெம்மேலியில் கிழக்குக் கடற்கரையை ஒட்டி அமைந்துள்ள, ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான 564 ஏக்கர் நிலப்பரப்பில் சவுக்கு பயிர் பயிரிடப்பட்டுள்ளது. அந்த நிலத்தை சூரிய ஒளி மின்திட்டத்தை செயல்படுத்தவும் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு வழங்குமாறு அறக்கட்டளையை நிர்வகிக்கும் செயல் அலுவலருக்கு 31.06.2023 அன்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதன் தொடர்ச்சியாக நிலத்தை ஒப்படைக்கும் பணிகளை விரைவுபடுத்தும்படி கடந்த 05.07.2023 அன்று அறக்கட்டளை செயல் அலுவலருக்கு காஞ்சிபுரம் மாவட்ட இந்து சமய அறநிலையத்துறையின் இணை ஆணையர் தொலைபேசி மூலம் வலியுறுத்தியுள்ளார்.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் செயல்பட்டு வரும் சில நில வணிக நிறுவனங்கள், அவற்றின் வீட்டு வசதி திட்டங்களையும், நிலவணிகத் திட்டங்களையும் செயல்படுத்துவதற்காக ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான 50 ஏக்கர், 100 ஏக்கர் பரப்பளவிலான நிலங்களை நீண்ட கால குத்தகைக்கு வழங்கவும் அதிகாரிகள் நிலையில் திட்டமிட்டிருப்பதாகவும், அதற்கான பணிகள் நடைபெறுவதாகவும் செய்திகள் கிடைத்துள்ளன.
மேற்குறிப்பிடப்பட்ட எந்தத் திட்டமும் ஆயிரம் காணி ஆளவந்தாரின் நோக்கங்களுக்கு இயைந்தவை அல்ல. இவை அனைத்துமே ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலங்களை பறித்து தனியார் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கும் நோக்கம் கொண்டவை. இவற்றை அனுமதிக்க முடியாது.
ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலங்கள் அறக்கட்டளையின் நோக்கத்திற்கு எதிராக நடைபெறுவது காலம் காலமாகவே நடைபெற்று வருகிறது. சென்னைக்கு கடல்நீரை குடிநீராக்கி வழங்கும் திட்டத்திற்காக ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான 125 ஏக்கர் நிலம் குத்தகைக்கு பெறப்பட்டது. அதைத் தொடர்ந்து பரதமுனிவர் பண்பாட்டு மையம் அமைப்பதற்காக நடனக் கலைஞர் பத்மா சுப்பிரமணியத்திற்கு 5 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது. இவை எதையும் ஏற்றுக்கொள்ள முடியாது.
கிழக்குக் கடற்கரைச் சாலையிலும், அதையொட்டிய பகுதிகளிலும் அரசுக்கு சொந்தமாக ஏராளமான நிலங்கள் உள்ளன. திரைப்படம் நகரம் அமைக்க வேண்டும் என்றாலும், சூரிய ஒளி மின்திட்டத்தை செயல்படுத்துவது என்றாலும் அந்த நிலத்தை அரசு பயன்படுத்திக் கொள்ளலாம். வன்னியர் குலத்தைச் சேர்ந்த ஆயிரம் காணி ஆளவந்தார் நாயகர் அவரது உழைப்பால் ஈட்டிய சொத்துகளை திரைப்பட நகரம், சூரிய ஒளி மின்திட்டம் என்ற பெயரில் தாரை வார்ப்பதை அனுமதிக்க முடியாது என்பது தான் வன்னிய குல சத்திரிய வம்சத்து மக்களின் எண்ணம் என்பதை தாங்கள் அறிய வேண்டும்.
பரத முனிவர் பண்பாட்டு மையம் அமைப்பதற்கும், திரைப்பட நகரம் அமைப்பதற்கும் ஆளவந்தாருக்கும் என்ன தொடர்பு? எவையெல்லாம் கூடாது என்று ஆளவந்தார் நினைத்தாரோ அவற்றுக்காக அவரது சொத்துகளை தாரை வார்ப்பதை அனுமதிக்க முடியாது. ஆளவந்தாரின் வம்சத்தைச் சேர்ந்த வன்னிய குல மக்கள் இன்னும் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் மிக மிக பின்தங்கிய நிலையில் தான் உள்ளனர். இறைபணிக்கு பயன்படுத்தப்பட்டது போக மீதமுள்ள ஆளவந்தார் நாயகரின் சொத்துகளை வன்னிய மக்களின் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்காக பயன்படுத்துவது தான் மிகவும் பொருத்தமாக இருக்கும். அதை விடுத்து ஆளவந்தாரின் சொத்துகளை தனியாருக்கு தாரை வார்க்க தமிழக அரசு துடிப்பதை வன்னிய மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அதை எதிர்த்து தமிழகம் இதுவரை காணாத வகையில் போராடுவார்கள். அதற்கு தமிழக அரசு வழிவகுத்து விடக்கூடாது.
ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலங்களை திரைப்பட நகரம், சூரிய ஒளி மின்திட்டம், கட்டுமானத் திட்டங்கள் என்ற பெயரில் தனியாருக்கு தாரை வார்ப்பதை தமிழக அரசு கைவிட வேண்டும். இது தொடர்பாக வகுக்கப்பட்டுள்ள அனைத்து திட்டங்களையும் தொடக்க நிலையிலேயே ரத்து செய்ய வேண்டும். அவற்றுக்கு மாற்றாக, ஆயிரம் காணி ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலங்களை இறைபணி தவிர்த்து வன்னியர்களின் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் வாழ்நிலை மேம்பாட்டுக்கான திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும் என்று தங்களைக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தமது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
சி.கார்த்திகேயன்