சிறுதானிய உணவை ஊக்குவிக்கும் வகையில் மத்திய பாதுகாப்புத்துறை மற்றும் எஃப்எஸ்எஸ்ஏஐ இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து.

ராணுவத்தினரிடையே சிறுதானியப் பயன்பாடு மற்றும் ஆரோக்கியமான உணவு முறைகளை ஊக்குவிக்கும் வகையில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா முன்னிலையில், மத்திய பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் புதுதில்லியில் கையெழுத்தானது. மேலும், சிறுதானியத்தின் நுகர்வை ஊக்குவிக்கும் வகையில் அதன் நன்மைகள் குறித்து விளக்கும் புத்தகத்தை இரு அமைச்சர்களும் வெளியிட்டனர்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் பாதுகாப்பு அமைச்சகத்தின் சார்பில் லெப்டினன்ட் ஜெனரல் ப்ரீத் மொஹிந்தெரா சிங்கும், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் சார்பில் அதன் நிர்வாக இயக்குனர் திருமதி இனோஷி சர்மாவும் கையெழுத்திட்டனர். மத்திய பாதுகாப்புத்துறையின் கீழ் இயங்கும் மெஸ், கேன்டீன்கள் மற்றும் பிற உணவு விற்பனை நிலையங்களில் சிறுதானியத்தால் தயாரிக்கப்பட்ட உணவு வகைகளை அறிமுகப்படுத்த இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வழி வகுக்கும்.

ராணுவ வீரர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் மாறுபட்ட தட்பவெப்ப நிலைகளில் அவர்கள் பணிபுரிய வேண்டிய சூழல் போன்றவை காரணமாக அவர்கள் உட்கொள்ளும் உணவு ஊட்டசத்து கொண்டதாக இருக்க வேண்டியது அவசியமாகிறது. சிறுதானிய உணவுகளை அளிப்பதன் மூலம் ராணுவ வீரர்களுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவை அளிப்பதை உறுதி செய்ய முடியும்.

எம்.பிரபாகரன்

Leave a Reply