என்எஃப்டி,செயற்கை நுண்ணறிவு மற்றும் மெட்டாவெர்ஸ் காலத்தில் குற்றங்கள் மற்றும் பாதுகாப்புகுறித்து ஹரியானாவின் குருகிராமில் நடைபெறும் ஜி20 மாநாட்டின் தொடக்க அமர்வில்மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உரையாற்றினார்.

என்எஃப்டி, செயற்கை நுண்ணறிவு மற்றும் மெட்டாவெர்ஸ் காலத்தில் குற்றங்கள் மற்றும் பாதுகாப்பு குறித்து ஹரியானாவின் குருகிராமில் நடைபெறும் ஜி20 மாநாட்டின் தொடக்க அமர்வில் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா உரையாற்றினார். இந்த மாநாட்டில் உள்துறை இணையமைச்சர் திரு அஜய் குமார் மிஸ்ரா, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர், மத்திய உள்துறை செயலாளர் மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். ஜி20 நாடுகள், 9 சிறப்பு அழைப்பு நாடுகள், சர்வதேச அமைப்புகள், இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் உள்பட இந்த 2 நாள் மாநாட்டின் 900-க்கும் அதிகமானோர் பங்கேற்கிறார்கள்.

உலகத்துடனான இணைப்பு அதிகரித்து வரும் காலத்தில் தேசிய மற்றும் சர்வதேச அளவில் கணினிப் பரவலாக்கத்தை கட்டமைப்பதில் ஒத்துழைப்பு  அவசியம் என்பதை இந்த நிகழ்வில் பேசிய திரு அமித் ஷா வலியுறுத்தினார்.  தொழில்நுட்பம் என்பது மரபார்ந்த புவியியல், அரசியல் மற்றும் பொருளாதார எல்லைகளை கடந்து மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து இன்று நாம் உலகளாவிய மிகப்பெரிய டிஜிட்டல் கிராமத்தில் வாழ்கிறோம் என்று அவர் குறிப்பிட்டார்.

தொழில்நுட்பம் என்பது மனிதகுலத்தை, சமூகங்களை, நாடுகளை நெருக்கமாக கொண்டு வருவதில் ஆக்கப்பூர்வமான வளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றாலும், சில சமூகவிரோத சக்திகள் பொருளாதாரத்திற்கும், சமூகமக்களுக்கும், அரசுகளுக்கும்  இடையூறு செய்வதற்கு தொழில்நுட்பத்தை பயன்படுத்துகின்றன என்று அவர் கூறினார்.  எனவே டிஜிட்டல் உலகத்தை அனைவருக்கும் பாதுகாப்பானதாக மாற்றுவதற்கு ஒருங்கிணைந்த செயல்திட்டத்தை நோக்கிய உலகளாவிய முன் முயற்சிக்கு இந்த மாநாடு முக்கியமானதாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

நமது பாதுகாப்பு சவால்கள் டைனமைட்டில் இருந்து மெட்டாவெர்சுக்கும், ஹவாலாவில் இருந்து கிரிப்டோகரன்சிக்கும் மாறியுள்ளன. இது உலக நாடுகளுக்குக் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எதிராக பொதுவான நடைமுறை உத்தியை வகுப்பதற்கு நாம் அனைவரும் ஒருங்கிணைய வேண்டும் என்று திரு அமித் ஷா தெரிவித்தார். எந்த ஒரு நாடும் அல்லது அமைப்பும் தனியாக இருந்து கணினி குற்ற அச்சுறுத்தல்களை முறியடிக்க இயலாது. எனவே புவியியல் சார்ந்த எல்லைகளுக்கு அப்பால் சிந்திக்க வேண்டிய அவசியம் உள்ளது. ஒரு ஐக்கிய முன்னணி தேவைப்படுகிறது என்று அவர் கூறினார்.

டிஜிட்டல் குற்றங்களை எதிர்கொள்ள அனைத்து நாடுகளிலும் ஒரே மாதிரியான சில சட்டங்களை இயற்றுவதற்கான முயற்சிகள் தேவைப்படுகின்றன என்பதை அவர் சுட்டிக்காட்டினார். சைபர் பாதுகாப்பு கொள்கைகளுக்கு ஒருங்கிணைந்த மற்றும் நிலையான அணுகுமுறை இருப்பது, தகவல் பரிமாற்றத்தில் நம்பிக்கையை அதிகரிக்கும் என்று அவர் கூறினார்.

ஊகித்தல், தடுத்தல், பாதுகாத்தல், மீட்டல் என்பதற்கான சிறந்த செயல்பாட்டுக்கு 24 மணி நேரமும் செயல்படும் சைபர் பாதுகாப்பு அமைப்பு தேவை என அவர் குறிப்பிட்டார்.  பொறுப்பான பயன்பாட்டை உறுதிசெய்ய, வெளிப்படையான மற்றும் பதிலளிக்கும் பொறுப்பு கொண்ட செயற்கை நுண்ணறிவு மற்றும் வளர்ந்து வரும்  தொழில்நுட்பங்களின் நிர்வாக கட்டமைப்பை உருவாக்கும் காலம் வந்துள்ளதாக திரு அமித் ஷா கூறினார்.

 சைபர் உலகத்தில் வெற்றி நமது நோக்கமே அன்றி, தோல்வி அல்ல, என்று குறிப்பிட்ட அவர், ஜி20 அமைப்பு சைபர் பாதுகாப்புக்கு அளிக்கும் முக்கியத்துவம், முக்கியமான தகவல் கட்டமைப்பு  மற்றும் டிஜிட்டல் முறையிலான  பொதுத்தளங்களின் பாதுகாப்பு மற்றும்  ஒருமைப்பாட்டை உறுதி செய்வதில் ஆக்கப்பூர்வமான பங்களிப்பை வழங்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

திவாஹர்

Leave a Reply