டிஜிட்டல் இந்தியா நில ஆவணங்கள் நவீனமயமாக்கல் திட்டத்தில் (டிஐஎல்ஆர்எம்பி) சிறந்து விளங்கிய 9 மாநிலங்களைச் சேர்ந்த செயலாளர்கள் மற்றும் 68 மாவட்ட ஆட்சியர்களுக்கு, குடியரசுத் தலைவர் திருமதி திரெளபதி முர்மு, 2023 ஜூலை 18, செவ்வாய்க்கிழமை அன்று புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் “பூமி சம்மான் – 2023” விருதுகளை வழங்குகிறார்.
மாநிலங்களைச் சேர்ந்த வருவாய் மற்றும் பதிவுத்துறை அதிகாரிகளுக்கு இந்த விருது மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்று மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் திரு கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார். “பூமி சம்மான்” திட்டம், நம்பிக்கை மற்றும் கூட்டு செயல்பாட்டை அடிப்படையாகக் கொண்ட மத்திய-மாநில கூட்டுறவு கூட்டாட்சிக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்று திரு கிரிராஜ் சிங் கூறியுள்ளார். நில ஆவணங்கள் கணினிமயமாக்கல் மற்றும் டிஜிட்டல் மயமாக்கலின் முக்கிய அம்சங்கள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் உள்ளீடுகளை அடிப்படையாகக் கொண்டது என்றும் அமைச்சர் தெரிவித்தார். நில ஆவணங்கள் மற்றும் பதிவுகளை டிஜிட்டல் மயமாக்கும் செயல்முறை, நிலத் தகராறுகள் தொடர்பான நீதிமன்ற வழக்குகளைக் குறைக்க உதவும் என்று திரு கிரிராஜ் சிங் மேலும் கூறினார்.
நாடு முழுவதும் 94 சதவீதம் டிஜிட்டல் மயமாக்கல் இலக்குகளை நில வளத் துறை எட்டியுள்ளதாகவும், 2024 மார்ச் 31 ஆம் தேதிக்குள் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் நில ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்குவதன் முக்கிய அம்சங்களை முழுமையாக எட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் திரு கிரிராஜ் சிங் தெரிவித்தார்.
திவாஹர்