வாழ்க்கை மாற்றத்திற்கான குவாண்டம் தொழில்நுட்பங்கள், செயற்கை நுண்ணறிவு ஆகிய முக்கியமான மற்றும் வளர்ந்துவரும் தொழில்நுட்பத்திற்கான கூட்டு ஆய்வு ஆலோசனைகளை இந்தியாவும், அமெரிக்காவும் வரவேற்றுள்ளன.

அமெரிக்காவின் எரிசக்தித்துறை அமைச்சர் திருமதி ஜெனிஃபர் எம். கிரான்ஹோம் இன்று புதுதில்லியில் மத்திய அறிவியல்,  தொழில்நுட்பம் (தனிப்பொறுப்பு), புவி அறிவியல் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியங்கள், அணுசக்தி மற்றும் விண்வெளித்துறை   இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்கை சந்தித்தார். இரு நாடுகளுக்கிடையே இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து இவர்கள் விவாதித்தனர்.  பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க பயணத்தையடுத்து இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது. திருமதி ஜெனிஃபருடன் அமெரிக்க உயர்நிலை தூதுக்குழுவும் வந்துள்ளது.

வாழ்க்கை மாற்றத்திற்கான குவாண்டம் தொழில்நுட்பங்கள், செயற்கை நுண்ணறிவு ஆகிய முக்கியமான மற்றும் வளர்ந்துவரும் தொழில்நுட்பத்திற்கான கூட்டு ஆய்வு ஆலோசனைகளை இந்தியாவும், அமெரிக்காவும் வரவேற்றுள்ளன.  இந்தத் திட்டத்தை இந்திய–அமெரிக்க அறிவியல் தொழில்நுட்ப அமைப்பும், இந்திய–அமெரிக்க அறிவியல் தொழில்நுட்ப அறக்கட்டளை நிதியத்திற்கான செயலகமும் வடிவமைத்துள்ளன.   இதற்கான ஆலோசனைகளை 2023 ஆகஸ்ட் 31 வரை சமர்ப்பிக்கலாம்.

இந்தத் திட்டம் குறித்து பேசிய மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், வணிக ரீதியில் லாபகரமான மற்றும் சமூக ரீதியில் பொருத்தமான இந்திய-அமெரிக்க கூட்டு முயற்சியில் புதிய கண்டுபிடிப்பு மற்றும் தொழில்முனைவுக்கு உதவியளிக்கப்படும் என்றார்.  இதில், இந்தியாவில் உள்ள ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள், அரசு, கல்வி, வணிக நிறுவனங்கள் ஆகியவையும் இடம்பெறும் என்று அவர் கூறினார்.

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) சகாப்தத்தில் புதிய திசையில், புதிய சக்தியாக அமெரிக்கா-இந்தியா (ஏஐ) எதிர்காலத்திற்கான தொழில்நுட்ப கூட்டாண்மையாக உருவெடுத்துள்ளது என்று டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.  இந்தியாவில் கூட்டு மேம்பாடு மற்றும் வணிக ரீதியிலான செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் தொழில்நுட்பங்கள், உயர் செயல்பாட்டு திறன் கொண்ட கணினி வசதிகளுக்கு அரசு-தனியார் ஒருங்கிணைப்பை ஊக்கப்படுத்துதல் ஆகியவற்றுக்கு இந்திய–அமெரிக்க அறிவியல் தொழில்நுட்ப அறக்கட்டளை நிதியத்தின் கீழ், 2 மில்லியன் அமெரிக்க டாலர் மானியத் திட்டம் தொடங்கப்பட்டு இருப்பதை அதிபர் ஜோ பைடனும், பிரதமர் திரு மோடியும் வரவேற்றிருப்பது  மன நிறைவை அளிக்கிறது என்று டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.

எம்.பிரபாகரன்

Leave a Reply