ஆனந்தில் உள்ள தேசிய பால்வள வாரியத்தில் ஜி20 வேளாண் பணிக்குழுவின் கீழ் கால்நடைத் துறையில் நிலையான மாற்றம் குறித்த சர்வதேச உரைக்கோவை நிகழ்வை மத்திய மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா தொடங்கி வைத்தார். சர்வதேச உரைக்கோவை நிகழ்வை ஏற்பாடு செய்ததற்காக தேசிய பால்வள வாரியத்தைப் பாராட்டிய திரு.ரூபாலா கால்நடைத் துறையில் தொழில்நுட்பத்தின் பங்களிப்பை வலியுறுத்தினார். நீடித்த மாற்றத்திற்காகக் கால்நடைத் துறையில் பல்வேறு கண்டுபிடிப்புகளைப் பரப்புவதற்கு இந்த மாநாட்டின் விவாதங்கள் உதவும் என்று அவர் கூறினார். கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத் துறைக்கான பிரதமரின் மேம்பாட்டு முயற்சிகளைப் பாராட்டிய திரு ரூபாலா, கால்நடை பராமரிப்பை ஒரு தனி அமைச்சகமாக மாற்றியிருப்பதாகவும் இது இத்துறையின் வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்துள்ளதாகவும் கூறினார். நடமாடும் கால்நடை மருத்துவப் பிரிவுகள், இனப் பெருக்கல் பண்ணைகள் ஆகியவை இதற்கு எடுத்துக்காட்டுகளாகும் என்றார்.
நிகழ்வில் பங்கேற்ற ஜி20-ன் புகழ்பெற்ற வல்லுநர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் பங்குதாரர்கள் கருத்தக்களைப் பரிமாறிக் கொண்டனர், அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர் மற்றும் கால்நடைத் துறையின் நீடிக்கும் தன்மையை உறுதிப்படுத்த புதுமையான அணுகுமுறைகளை ஆராய்ந்தனர்.
மத்திய அரசின் கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை, மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகம், தேசிய பால்வள மேம்பாட்டு வாரியம் ; ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு ஆகியவை கூட்டாக 2023 ஜூலை 18 முதல் 19 வரை 2 நாள் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருந்தன.
எம்.பிரபாகரன்