ம.பி.யின் கஜுராஹோவில் ஜூலை 25 ஆம் தேதி 5 வது ஹெலிகாப்டர் மற்றும் சிறிய விமான உச்சிமாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டை மத்தியப் பிரதேச முதல்வர் திரு சிவராஜ் சிங் சவுகான் மற்றும் மத்திய சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் எஃகு அமைச்சர் திரு ஜோதிராதித்யா எம் சிந்தியா ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர்.

தொலைதூர மற்றும் மலைப்பாங்கான நிலப்பரப்புகளில் உடான் திட்டத்தின் நோக்கத்தை அதிகரிப்பது உச்சிமாநாட்டின் நோக்கமாகும்.

மத்தியப்பிரதேச அரசின் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம், பவன் ஹன்ஸ் லிமிடெட் மற்றும் இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு (ஃபிக்கி) ஆகியவை இணைந்து 5 வது ஹெலிகாப்டர் மற்றும் சிறிய விமான உச்சிமாநாட்டை ஜூலை 25, 2023 அன்று மத்தியப் பிரதேசத்தின் கஜுராஹோவில் நடத்துகின்றன. இந்த நிகழ்வின் கருப்பொருள் “கடைசி மைலை அடைதல்: ஹெலிகாப்டர்கள் மற்றும் சிறிய விமானங்கள் மூலம் பிராந்திய இணைப்பு” என்பதாகும். மத்தியப் பிரதேச முதல்வர் திரு சிவராஜ் சிங் சவுகான் மற்றும் மத்திய சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் எஃகு அமைச்சர் திரு ஜோதிராதித்யா எம் சிந்தியா ஆகியோர் இதை தொடங்கி வைக்கின்றனர். ஒரு தொடக்க அமர்வும், அதைத் தொடர்ந்து ஒரு தொழில்நுட்ப அமர்வும் இதில் அடங்கும்.

உச்சிமாநாட்டின் பரந்த நோக்கங்கள் பின்வருமாறு:

இந்திய ஹெலிகாப்டர் மற்றும் சிறிய விமானத் துறையின் வளர்ச்சிப் போக்கை விவாதிக்க அனைத்து தொழில் பங்குதாரர்களுக்கும், கொள்கை வகுப்பாளர்களுக்கும் ஒரு பொதுவான தளத்தை வழங்குதல்.

தொலைதூர மற்றும் மலைப்பாங்கான நிலப்பரப்புகளில் உடான் திட்டத்தின் நோக்கத்தை மேம்படுத்துதல் மற்றும் நாட்டின் கிராமப்புறத்திலிருந்து நகர்ப்புற இணைப்பை விரிவுபடுத்துதல்.

தடையற்ற சேவைகளை வழங்குவதன் மூலம் தற்போதுள்ள மற்றும் சாத்தியமான சுற்றுலா முக்கிய தலங்களை கொண்ட இடங்களுக்கு ஹெலிகாப்டர் மற்றும் சிறிய விமான இணைப்பை மேம்படுத்துதல்.

ஹெலிகாப்டர்கள் மற்றும் சிறிய விமானங்கள் இந்தியாவின் போக்குவரத்து சுற்றுச்சூழல் அமைப்பில் ஒருங்கிணைந்த பங்கு வகிக்கின்றன. சிவிலியன் ஹெலிகாப்டர்கள் மேம்பட்ட அணுகலுக்கு பங்களிக்கின்றன, குறிப்பாக தொலைதூர பகுதிகளில், சுற்றுலாவுக்கு மிகப்பெரிய திறனை வழங்குகின்றன, இது பயணிகள் தனித்துவமான வழிகளில் இயற்கை நிலப்பரப்புகள் மற்றும் கலாச்சார இடங்களை அனுபவிக்க அனுமதிக்கிறது. ஹெலிகாப்டர் சேவையின் பிற அம்சங்களில் அவசர மருத்துவ சேவைகள் மற்றும் வெள்ளத்தின் போது பேரிடர் மேலாண்மை, மீட்பு நடவடிக்கைகள் போன்றவை அடங்கும்.

இதேபோல், சிறிய விமானங்கள் வணிக மற்றும் பொழுதுபோக்கு பயணிகளுக்கு திறமையான மற்றும் வசதியான போக்குவரத்து விருப்பங்களை வழங்குகின்றன, பிராந்திய விமான இணைப்பை மேம்படுத்துகின்றன மற்றும் குறைவாக அறியப்பட்ட இடங்களின் ஆய்வை ஊக்குவிக்கின்றன. விமானப் போக்குவரத்து மற்றும் சுற்றுலாத் துறைகள் ஒருவருக்கொருவர் பயனடைகின்றன, வேலை வாய்ப்புகளை ஊக்குவிக்கின்றன மற்றும் நாடு முழுவதும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன.

இந்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை ஒரு முன்னுதாரண மாற்றத்திற்கு உள்ளாகி வரும் ஒரு முக்கியமான நேரத்தில் இந்த உச்சிமாநாடு வருகிறது. பொருளாதாரப் பெருக்கம், வேலைவாய்ப்புப் பெருக்கம் என்ற இரண்டு முக்கிய காரணிகளை எப்போதும் தன்னுடன் கொண்டு வருவதால் இந்தத் துறை இந்தியாவுக்கு மட்டுமல்ல, உலகெங்கிலும் உள்ள மனிதகுலத்திற்கும் இப்போது காலத்தின் தேவையாக மாறியுள்ளது.

5 வது ஹெலி உச்சிமாநாடு இந்தியாவின் சிவில் விமானப் போக்குவரத்துத் துறையை மேலும் ஊக்குவிக்கும் திறமையான மற்றும் பகுத்தறிவு முடிவுகளை செயல்படுத்த கொள்கை வகுப்பாளர்களுடன் ஈடுபடவும் ஒத்துழைக்கவும் தொழில்துறை பங்குதாரர்களை ஒன்றிணைக்கும்.

எம்.பிரபாகரன்

Leave a Reply