ராஜஸ்தானின் சிகாரில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டி நாட்டுக்கு அர்ப்பணித்தார். 1.25 லட்சத்துக்கும் அதிகமான பிரதமரின் வேளாண் வள மையங்களை (பி.எம்.கே.எஸ்.கே) நாட்டிற்கு அர்ப்பணித்தல். கந்தகம் பூசப்பட்ட புதிய வகை யூரியா கோல்டு அறிமுகம் செய்தல், டிஜிட்டல் வர்த்தகத்திற்கான திறந்த வலைப்பின்னலில் (ஓ.என்.டி.சி) 1600 உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளை (எஃப்.பி.ஓ) இணைத்தல், பிரதமரின் விவசாயி கௌரவிப்பு நிதியின் கீழ் 8.5 கோடி பயனாளிகளுக்கு சுமார் ரூ. 17,000 கோடி 14-வது தவணைத் தொகையை விடுவித்தல் சித்தோர்கர், தோல்பூர், சிரோஹி, சிகார், ஸ்ரீ கங்காநகர் ஆகிய இடங்களில் 5 புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்கி வைத்தல், பரன், பண்டி, கரௌலி, ஜுன்ஜுனு, சவாய் மாதோபூர், ஜெய்சால்மர் மற்றும் டோங்க் ஆகிய இடங்களில் 7 மருத்துவக் கல்லூரிகளுக்கு அடிக்கல் நாட்டுதல், உதய்பூர், பன்ஸ்வாரா, பிரதாப்கர், துங்கர்பூர், ஜோத்பூர் ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள 6 ஏகலவ்யா மாதிரி உறைவிடப் பள்ளிகளைத் திறந்து வைத்தல், திவ்ரி, ஜோத்பூர் ஆகிய இடங்களில் கேந்திரிய வித்யாலயாக்களைத் திறந்து வைத்தல் ஆகியவை இந்தத் திட்டங்களில் அடங்கும்.
நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வருகை தந்த பிரதமர், பிரதமரின் வேளாண் வள மையத்தின் மாதிரியைப் பார்வையிட்டார். இந்த நிகழ்வில், திரண்டிருந்தோரிடையே உரையாற்றிய பிரதமர், நாட்டின் பல இடங்களிலிருந்து இன்றைய நிகழ்வில் இணைந்துள்ள கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு மரியாதை செலுத்தினார். கட்டு ஷியாம் அவர்களின் பூமி இந்தியாவின் ஒவ்வொரு மூலை முடுக்கிலிருந்தும் வருகின்ற யாத்ரீகர்களுக்கு நம்பிக்கை அளிக்கிறது என்று அவர் கூறினார். ஷெகாவதியின் வீர பூமியிலிருந்து பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்குவதற்கான வாய்ப்பைப் பெற்றதற்காக நன்றி தெரிவித்த அவர், பிரதமரின் விவசாய கௌரவிப்பு நிதியின் (பி.எம்-கிசான்) கீழ் தவணைத் தொகை கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு நேரடியாக மாற்றப்படுவதைக் குறிப்பிட்டார். நாட்டில் 1.25 லட்சத்துக்கும் அதிகமான பிரதமரின் வேளாண் வள மையங்களின் அர்ப்பணிப்பு குறித்து பேசிய பிரதமர், இது கிராம மற்றும் வட்டார அளவில் கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு நேரடியாக பயனளிக்கும் என்றார். டிஜிட்டல் வர்த்தகத்திற்கான திறந்த வலைப்பின்னலில் (ஓ.என்.டி.சி) வேளாண் உற்பத்தியாளர் அமைப்புகளை (எஃப்.பி.ஓ) இணைப்பது பற்றியும் அவர் குறிப்பிட்டார். இது நாட்டின் எந்தப் பகுதியிலிருந்தும் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை சந்தைக்கு எடுத்துச் செல்வதை எளிதாக்கும் என்று அவர் கூறினார். யூரியா கோல்டு, புதிய மருத்துவக் கல்லூரிகள் மற்றும் ஏகலவ்யா மாதிரிப் பள்ளிகள் ஆகியவை பற்றியும் அவர் எடுத்துரைத்தார். இன்றைய வளர்ச்சித் திட்டங்களுக்காக இந்திய மக்களுக்கும் கோடிக்கணக்கான விவசாயிகளுக்கும் பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்.
சிகார் மற்றும் ஷெகாவதி பிராந்திய விவசாயிகளின் முக்கியத்துவத்தை குறிப்பிட்ட பிரதமர், நிலப்பரப்பு கடினமாக இருந்தபோதும் அவர்களின் கடின உழைப்புக்கு மரியாதை செலுத்தினார். விவசாயிகளின் வலிகளையும், தேவைகளையும் மத்தியில் உள்ள தற்போதைய அரசு புரிந்து கொண்டுள்ளது என்று பிரதமர் கூறினார். கடந்த 9 ஆண்டுகளில் விதை முதல் சந்தை வரை புதிய அமைப்புகள் எவ்வாறு உருவாக்கப்பட்டுள்ளன என்பதை பிரதமர் விவரித்தார். 2015-ம் ஆண்டு சூரத்கரில் மண்வள அட்டை திட்டம் தொடங்கப்பட்டதை அவர் நினைவுகூர்ந்தார். இந்தத் திட்டத்தின் மூலம், கோடிக்கணக்கான விவசாயிகள் மண்ணின் வளம் குறித்த அறிவின் அடிப்படையில் உகந்த முடிவுகளை எடுத்து வருகின்றனர். 1.25 லட்சம் பிரதமரின் வேளாண் வள மையங்கள் (பி.எம்.கே.எஸ்.கே) விவசாயிகளின் செழிப்புக்கு வழிவகுக்கும் என்று அவர் கூறினார். இந்த மையங்கள் விவசாயிகளின் தேவைகள் அனைத்தையும் ஒரே இடத்தில் பூர்த்தி செய்வதாக இவை உருவாக்கப்பட்டு வருகின்றன. இந்த மையங்கள் விவசாயிகளுக்கு விவசாயம் தொடர்பான பிரச்சினைகள் குறித்த மேம்பட்ட, நவீன தகவல்களை வழங்கும். மேலும் அரசின் வேளாண் திட்டங்கள் குறித்த தகவல்களையும் இந்த மையங்கள் சரியான நேரத்தில் வழங்கும். விவசாயிகள் தொடர்ந்து இந்த மையங்களுக்குச் சென்று அங்கு கிடைக்கும் தகவலை கொண்டு பயனடைய வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார். இந்த ஆண்டு இறுதிக்குள் கூடுதலாக 1.75 லட்சம் பிரதமரின் வேளாண் வள மையங்கள் (பி.எம்.கே.எஸ்.கே) நிறுவப்படும் என்று பிரதமர் தெரிவித்தார்.
எஸ்.சதிஸ் சர்மா