மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை, நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம், ஜவுளித் துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல், இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்தில் ரசாயன மற்றும் பெட்ரோகெமிக்கல் தொழில் முக்கிய பங்கு வகிக்கிறது என்றும், எதிர்காலத்தில் வளர்ச்சியின் முக்கிய உந்து சக்தியாகத் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் கூறினார். புதுதில்லியில் நேற்று நடைபெற்ற ‘இந்தியா: உலகளாவிய ரசாயனங்கள் மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ் உற்பத்தி மையங்கள்’ (ஜி.சி.பி.எம்.எச் 2023) என்ற 3 வது பதிப்பில் , ‘எஃப்.டி.ஏக்கள் – உலகை இணைப்பது – வசுதைவ குடும்பகம் – ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்’ என்ற அமர்வில் சிறப்பு விருந்தினராக உரையாற்றிய திரு கோயல், இந்தியாவின் பொருளாதாரம், கண்டுபிடிப்பு சுற்றுச்சூழல் மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆகியவற்றில் ரசாயனம் மற்றும் பெட்ரோகெமிக்கல் துறையின் பங்களிப்பை பாராட்டினார்.
ஏற்றுமதியை அதிகரிப்பதிலும், பல துறைகளின் வளர்ச்சியை கூட்டாக ஊக்குவிப்பதிலும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் (எஃப்.டி.ஏ) முக்கிய பங்கு வகிக்கின்றன என்று அமைச்சர் கூறினார். ரசாயனங்கள் மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ் துறையில் வர்த்தகம், முதலீடு மற்றும் ஒத்துழைப்பை எஃப்.டி.ஏ.க்கள் எளிதாக்குவதற்கான வழிகளை ஆராய்வதற்கான ஒரு மன்றமாக ஜி.சி.பி.எம்.எச் 2023 உச்சிமாநாடு செயல்படுகிறது என்று அவர் கூறினார்.
தொழில்துறை தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் வல்லுநர்கள் இந்த முக்கியமான துறையின் போட்டித்தன்மை மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்த எஃப்.டி.ஏ.க்களை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கவும் கருத்துக்களை பரிமாறிக் கொள்ளவும் ஒரு தளத்தை வழங்கியதற்காக ஜி.சி.பி.எம்.எச் 2023 ஐ திரு கோயல் பாராட்டினார். இந்தியாவின் ரசாயன மற்றும் பெட்ரோகெமிக்கல் தொழில்களில் வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்க எஃப்.டி.ஏக்கள் உதவும் என்று அவர் கூறினார். இது புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும், புதிய உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கும் வழிவகுக்கும் என்றும், உலகத்துடன் தொடர்புகொள்வதற்கான தொழில்துறையின் திறனை வலுப்படுத்தும் என்றும் அமைச்சர் எடுத்துரைத்தார்.
வளர்ந்த நாடாக மாறுவதற்கான நமது இலக்கில் நிலைத்தன்மையின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். எதிர்கால சந்ததியினருக்கு நிலையான இந்தியாவை உருவாக்குவது தற்போதைய தலைமுறைக்கு எவ்வளவு முக்கியம் என்றும் அவர் குறிப்பிட்டார். நிலையான நடைமுறைகளை ஊக்குவிப்பதற்கான அனைத்து பங்குதாரர்களின் முயற்சிகள் மற்றும் அர்ப்பணிப்பை அமைச்சர் பாராட்டினார்.
சிறந்த நடைமுறைகளைப் பகிர்வதும், ஒத்துழைப்பை ஊக்குவிப்பதும் சந்தேகத்திற்கு இடமின்றி ரசாயன மற்றும் பெட்ரோகெமிக்கல் தொழில்களில் மிகவும் நிலையான மற்றும் வளமான எதிர்காலத்திற்கு வழிவகுக்கும் என்று அவர் கூறினார். தற்போதைய தலைமுறையினர் இனி வரும் தலைமுறையினருக்கு கடமை உணர்வுடனும், அர்ப்பணிப்புடனும் பணியாற்ற வேண்டும் என்று பியூஷ் கோயல் கேட்டுக் கொண்டார். மகாத்மா காந்தியை மேற்கோள் காட்டி, “நாம் அனைவரும் பூமி கிரகத்தை அடுத்த தலைமுறைக்கு அறங்காவலர்களாகப் பெற்றுள்ளோம்” என்று அவர் கூறினார்.
எம்.பிரபாகரன்