தில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் அகில பாரதிய சிக்ஷா சமகத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். இது தேசிய கல்விக் கொள்கை 2020 இன் 3 வது ஆண்டு நிறைவையொட்டி நடைபெறுகிறது. பிரதமரின் ஸ்ரீ திட்டத்தின் கீழ் முதல் தவணை நிதியையும் அவர் விடுவித்தார். 6207 பள்ளிகளுக்கு முதல் தவணையாக ரூ.630 கோடி வழங்கப்பட்டது. 12 இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட கல்வி மற்றும் திறன் பாடத்திட்ட புத்தகங்களையும் அவர் வெளியிட்டார். நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்பட்ட கண்காட்சியையும் பிரதமர் பார்வையிட்டார்.
கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், நாட்டின் தலையெழுத்தை மாற்றக்கூடிய காரணிகளில் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். “21 ஆம் நூற்றாண்டின் இந்தியா முன்னேறும் இலக்குகளை அடைவதில் நமது கல்வி முறை பெரும் பங்கு வகிக்கிறது”, என்று அவர் கூறினார். அகில பாரதிய சிக்ஷா சமகத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதமர், கல்விக்கு விவாதமும் உரையாடலும் மிகவும் முக்கியம் என்றார். வாரணாசியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ருத்ராட்ச மாநாட்டு மையத்தில் கடந்த அகில பாரதிய சிக்ஷா சமகம் நடைபெற்றதையும், இந்த ஆண்டு அகில பாரதிய சிக்ஷா சமகம் புத்தம் புதிய பாரத மண்டபத்தில் நடைபெறுவதையும் பிரதமர் குறிப்பிட்டார். முறைப்படி திறக்கப்பட்ட பின்னர் மண்டபத்தில் நடைபெறும் முதல் நிகழ்ச்சி இதுவாகும்.
காசியின் ருத்ராட்சம் முதல் நவீன பாரத மண்டபம் வரை, பண்டைய மற்றும் நவீனத்தை ஒருங்கிணைக்கும் அகில பாரதிய சிக்ஷா சமகத்தின் பயணத்தில் ஒரு மறைக்கப்பட்ட செய்தி உள்ளது என்று பிரதமர் கூறினார். ஒருபுறம், இந்தியாவின் கல்வி முறை நாட்டின் பண்டைய பாரம்பரியங்களைப் பாதுகாத்து வருகிறது, மறுபுறம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் நாடு வேகமாக முன்னேறி வருகிறது என்று அவர் கூறினார். கல்வித் துறையில் இதுவரை ஏற்பட்டுள்ள முன்னேற்றத்திற்கு பங்களித்தவர்களை பிரதமர் பாராட்டினார். இன்று தேசிய கல்விக் கொள்கையின் மூன்றாம் ஆண்டு நிறைவைக் குறிக்கிறது என்று குறிப்பிட்ட பிரதமர், இதை ஒரு பணியாக எடுத்துக் கொண்டு மகத்தான முன்னேற்றத்திற்கு பங்களித்த அறிவுஜீவிகள், கல்வியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவித்தார். இக்கண்காட்சி குறித்துப் பேசிய பிரதமர், திறன்கள், கல்வி, புதுமையான நுட்பங்களின் காட்சிப்படுத்தலை எடுத்துரைத்தார். விளையாட்டுத்தனமான அனுபவங்கள் மூலம் சிறு குழந்தைகள் கற்கும் நாட்டில் கல்வி மற்றும் பள்ளிக் கல்வியின் மாறிவரும் முகத்தை அவர் தொட்டு, அதற்கான நம்பிக்கையை வெளிப்படுத்தினார். கண்காட்சியை பார்வையிடுமாறு விருந்தினர்களை அவர் கேட்டுக்கொண்டார்.
சகாப்த மாற்றங்களை உருவாக்க சிறிது நேரம் எடுக்கும் என்று பிரதமர் கூறினார். தேசிய கல்விக் கொள்கையின் தொடக்கத்தின் போது உள்ளடக்கப்பட வேண்டிய பரந்த அம்சங்களை நினைவு கூர்ந்த பிரதமர், அனைத்து பங்குதாரர்களின் புதிய கருத்துக்களை ஏற்றுக்கொள்வதற்கான அர்ப்பணிப்பு மற்றும் விருப்பத்தைப் பாராட்டினார். தேசிய கல்விக் கொள்கையில் பாரம்பரிய அறிவு மற்றும் எதிர்காலத் தொழில்நுட்பங்களுக்கு அதே முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது என்றார் அவர். தொடக்கக் கல்வியில் புதிய பாடத்திட்டம், பிராந்திய மொழிகளில் புத்தகங்கள், உயர்கல்வி மற்றும் நாட்டில் ஆராய்ச்சி சூழலை வலுப்படுத்த கல்வி உலகின் பங்குதாரர்களின் கடின உழைப்பை அவர் குறிப்பிட்டார். 10 +2 முறைக்கு பதிலாக இப்போது 5 + 3 + 3 + 4 முறை நடைமுறையில் இருப்பதை மாணவர்கள் இப்போது புரிந்து கொண்டுள்ளனர் என்றார். 3 வயதில் கல்வி தொடங்கப்பட்டு நாடு முழுவதும் ஒரே சீரான நிலை ஏற்படும். தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகவும், தேசிய கல்விக் கொள்கையின் கீழ் தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பு விரைவில் வரும் என்றும் அவர் தெரிவித்தார். 3-8 வயது மாணவர்களுக்கான கட்டமைப்புத் தயாராக உள்ளது. நாடு முழுவதும் ஒரே மாதிரியான பாடத்திட்டம் இருக்கும், இதற்காக என்.சி.இ.ஆர்.டி புதிய பாடப் புத்தகங்களை தயாரித்து வருகிறது. பிராந்திய மொழிகளில் கல்வி வழங்கப்பட்டதன் விளைவாக 3 முதல் 12 ஆம் வகுப்பு வரை 22 வெவ்வேறு மொழிகளில் சுமார் 130 வெவ்வேறு பாடங்களின் புதிய புத்தகங்கள் வருகின்றன என்று பிரதமர் தெரிவித்தார்.
எம்.பிரபாகரன்