புதிய தேசிய கல்விக் கொள்கை 2020-ன் 3 வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு புதுதில்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் அகில பாரதிய சிக்ஷா சமகம் 2023 எனப்படும் அகில இந்தியக் கல்வி மாநாடு இரண்டு நாட்கள் (29.07.2023 மற்றும் 30.07.2023) நடைபெறுகிறது.
இதில் மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் உல்லாஸ் என்ற மொபைல் செயலியை அறிமுகப்படுத்தினார்.
நிகழ்ச்சியில் பேசிய திரு தர்மேந்திரப் பிரதான், அடிப்படை கல்வியறிவை பரவலாக்குவதற்கு வசதியாக தொழில்நுட்பத் திறனைப் பயன்படுத்துவதில் உல்லாஸ் மொபைல் செயலி ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமையும் என்றார்.
செயல்பாட்டுக் கல்வியறிவு, தொழில் திறன்கள், நிதிக் கல்வியறிவு, சட்டக் கல்வியறிவு, டிஜிட்டல் அறிவு மற்றும் தேசத்தை சிறப்பாகக் கட்டமைப்பதில் மக்கள் ஆற்ற வேண்டிய பணிகள் போன்ற பல முக்கியமான வாழ்க்கைத் திறன்களை ஊக்குவிப்பதில் உல்லாஸ் செயலி கவனம் செலுத்தும் என்று அமைச்சர் எடுத்துரைத்தார்.
சமூகத்தில் அனைவரும் வாழ்நாள் கற்றல் தொடர்பான அம்சங்களைப் புரிந்துகொள்வது (ULLAS Understanding Lifelong Learning for All in Society) என்ற பொருளில் இந்த உல்லாஸ் மொபைல் செயலி உருவாக்கப்பட்டுள்ளது என்றும் இந்த முன்முயற்சி ஒவ்வொரு தனிநபரையும் சென்றடைந்து கல்வியறிவில் புரட்சியை ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த செயலி அடிப்படை எழுத்தறிவு மற்றும் முக்கியமான வாழ்க்கைத் திறன்கள் தொடர்பான இடைவெளிகளைக் குறைக்கும். பள்ளிக்குச் செல்லும் வாய்ப்பை இழந்த 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு அடிப்படைக் கல்வி, டிஜிட்டல், நிதி கல்வியறிவு வாழ்க்கைத் திறன்களை வழங்குகிறது இது. இத்திட்டம் தன்னார்வலர்கள் மூலம் செயல்படுத்தப்படுகிறது.
எஸ்.சதிஸ் சர்மா