உலகின் மிக உயரமான ரயில் பாலம் மற்றும் ஆசியாவின் மிக நீளமான அதிநவீன சுரங்கப்பாதை சாலை ஆகியவை, திரு.நரேந்திர மோடி பிரதமராகப் பதவியேற்ற பிறகு கடந்த 9 ஆண்டுகளில் உதம்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் செயல்படுத்தப்பட்ட தேசிய அளவிலான முக்கிய திட்டங்களில் சில இது என மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். தனது தொகுதியைச் சேர்ந்த அதிகாரிகள், பாஜக நிர்வாகிகள் மற்றும் சமூக செயல்பாட்டாளர்களுக்கு மதிய விருந்து அளித்துப் பேசியபோது அவர் இதனைத் தெரிவித்தார்.
டாக்டர் ஜிதேந்திர சிங் தனது தொகுதியின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பிரதிநிதிகளுடன் தொடர்ந்து நடத்தி வரும் வழக்கமான சந்திப்புகளின் பகுதியாக இது அமைந்தது. இன்றைய கூட்டத்தில் தோடா, பஷோலி, பில்லவர், கதுவா மற்றும் ரம்பான் உள்ளிட்ட பகுதிகள் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டன.
கடந்த 9 ஆண்டுகளில் உதம்பூர்-தோடா-கதுவா மக்களவைத் தொகுதியில் முன்னெப்போதும் இல்லாத வளர்ச்சிப் பணிகள் நடந்துள்ளதாகவும், இது குறித்து தொகுதியின் ஒவ்வொரு மூலையிலும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய அவசியம் உள்ளதாகவும் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார். இந்தியாவில் கடந்த ஐந்து ஆண்டுகளில் மத்திய அரசு நிதியுதவி பெறும் மூன்று மருத்துவக் கல்லூரிகளைப் பெற்ற ஒரே தொகுதி உதம்பூர்-தோடா-கதுவா நாடாளுமன்றத் தொகுதி என டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.
கதுவா அருகே வட இந்தியாவின் முதல் உயிரி தொழில்நுட்பவியல் பூங்கா, கதுவாவில் முதல் விதை பதப்படுத்தும் ஆலை, உதம்பூரில் வானொலி நிலையம் மற்றும் இரண்டு பாஸ்போர்ட் அலுவலகங்கள் உள்ளிட்டவை கடந்த 9 ஆண்டுகளில் இந்தத் தொகுதியில் அமைக்கப்பட்டுள்ளன.
எம்.பிரபாகரன்