ஜி20 எம்பவர் உச்சிமாநாட்டை நாளை காந்தி நகரில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தொடங்கி வைக்கிறார்.

பெண்களின் பொருளாதார பிரதிநிதித்துவத்தின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கான ஜி20 எம்பவர்  உச்சிமாநாடு, குஜராத் மாநிலம் காந்திநகரில் உள்ள மகாத்மா மந்திரில் ஆகஸ்ட் 1, 2023 அன்று நடைபெற உள்ளது. “பெண்கள் தலைமையிலான வளர்ச்சி: நிலையான, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் சமத்துவமான உலகளாவிய பொருளாதார வளர்ச்சியை உறுதிசெய்தல்” என்ற கருப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த உச்சிமாநாட்டில், ஜி20 உறுப்பு நாடுகள், சிறப்பு அழைப்பு நாடுகள், சர்வதேச அமைப்புகள் மற்றும் பல உலகளாவிய வல்லுநர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் பங்குதாரர்கள் பங்கேற்கின்றனர்.

பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்,  ஒருங்கிணைப்பு அமைச்சகமாக செயல்படும் உச்சிமாநாட்டை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் திருமதி ஸ்மிருதி ஜுபின் இரானி தொடங்கி வைக்கிறார். பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு மற்றும் ஆயுஷ் துறை இணையமைச்சர் டாக்டர் முஞ்சபாரா மகேந்திரபாய், ஜி20 எம்பவர் கூட்டணியின் தலைவர் டாக்டர் சங்கீதா ரெட்டி உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள்.

ஜி20 எம்பவர் தொழில்நுட்ப சமத்துவ டிஜிட்டல் உள்ளடக்க தளம், சிறந்த நடைமுறைகள் அடங்கிய தொகுப்பு, கே.பி.ஐ தகவல்பலகை மற்றும் ஜி20 எம்பவர் அறிக்கை 2023 ஐ ஏற்றுக்கொள்வது உட்பட எம்பவர் கூட்டணியின் கீழ் உள்ள முக்கிய அம்சங்கள் துவக்க அமர்வில் நிறைந்திருக்கும்.

கடந்த பிப்ரவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் இந்தியாவில் இரண்டு சர்வதேச அளவிலான கூட்டங்கள் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் காந்திநகரில் உச்சிமாநாடு நடைபெற உள்ளது. கருப்பொருளின் அடிப்படையில் இந்தக் கூட்டங்களில் மேற்கொள்ளப்படும் விவாதங்கள்,  ஜி20 எம்பவர் அறிக்கையில் பிரதிபலிக்கப்படுவதுடன்,  ஜி20 தலைவர்களுக்கும் பரிந்துரைகளாக வழங்கப்படும்.

எம்.பிரபாகரன்

Leave a Reply