நடப்புப் பருவத்தில் பயிர்க்கழிவுகளை எரிப்பதைத் தடுப்பதில் பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம், மற்றும் தலைநகர் தில்லி மாநிலங்களின் தயார்நிலையை மறுஆய்வு செய்வதற்காக வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர், சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் ஆகியோர் தலைமையில் அமைச்சகங்களுக்கு இடையிலான உயர்நிலைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் உத்தரப்பிரதேச அரசின் வேளாண்துறை அமைச்சர் திரு சூர்ய பிரதாப் ஷாஹி, பஞ்சாப் வேளாண்துறை அமைச்சர் திரு குர்மீத் சிங் குடியான், ஹரியானா வேளாண்துறை அமைச்சர் திரு ஜெய் பிரகாஷ் தலால், தலைநகர் தில்லியின் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் திரு கோபால் ராய் ஆகியோர் கலந்து கொண்டனர். வேளாண் அமைச்சகம், சுற்றுச்சூழல் அமைச்சகம் மற்றும் பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம், தில்லி மாநிலங்களைச் சேர்ந்த மூத்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
நடப்பு பருவத்தில் பயிர்க்கழிவுகளை எரிப்பதைத் தடுப்பதற்கான செயல்திட்டம் மற்றும் உத்திகளை மாநிலங்கள் இக்கூட்டத்தில் முன்வைத்தன. பயிர்க்கழிவு மேலாண்மைக்கு ஒதுக்கப்படும் நிதியைப் பயன்படுத்தவும், அறுவடைக் காலத்திற்கு முன்பே பயிர்களின் தட்டைகள் மேலாண்மை இயந்திரங்களை கிடைக்கச் செய்யவும், பயிர்க்கழிவுகளை எரிப்பதற்கு பதிலாக விவசாயிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இக்கூட்டத்தில் பேசிய மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர், கடந்த 5 ஆண்டுகளாக பயிர்க்கழிவுகளை எரிப்பதைத் தடுக்கும் முயற்சிகள் நல்ல பலனைத் தருகின்றன என்றார். காற்று தர மேலாண்மை ஆணையம் போன்ற அமைப்புகளின் ஒருங்கிணைந்த முயற்சியால், பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் பயிர்க்கழிவு எரிப்பு சம்பவங்கள் குறைந்துள்ளன. மின்சாரம், பயோ மாஸ் போன்ற பயன்பாட்டு தொழில்களுக்கு மூலப்பொருட்களை வழங்கும் நெல் வைக்கோல் மேலாண்மையை ஊக்குவிக்க வேண்டிய அவசியம் உள்ளது என்று அவர் கூறினார்.
பயிர்க்கழிவுகளை எரிக்கும் பிரச்சனைக்கு தீர்வு காண்பதில் தீவிரம் காட்டியதற்காக அனைத்து தரப்பினருக்கும் மத்திய வேளாண் துறை அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் பாராட்டு தெரிவித்தார். பயிர்க்கழிவுகளை எரிப்பது தில்லி மற்றும் அதன் அருகிலுள்ள பகுதிகளின் மாசுபாட்டுடன் தொடர்புடையது மட்டுமல்ல. இது மண் ஆரோக்கியத்தையும், அதன் வளத்தையும் மோசமாக பாதிக்கிறது. எனவே, தில்லியில் காற்று மாசுபாட்டை எதிர்த்துப் போராடுவதற்கும், மண்ணின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்கும் நமது முயற்சிகள் இருக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
எம்.பிரபாகரன்