இந்தியாவுக்கும் லத்தீன் அமெரிக்க மற்றும் கரீபியன் பகுதிகளுக்கும் இடையே ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டியது அவசியம்: மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் .

இந்தியாவுக்கும் லத்தீன் அமெரிக்க மற்றும் கரீபியன் (எல்ஏசி) பகுதிகளுக்கும் இடையே ஒத்துழைப்பு மற்றும் நம்பிக்கையை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் வலியுறுத்தியுள்ளார். புதுதில்லியில் நேற்று (03.08.2023) நடைபெற்ற 9- வது சிஐஐ இந்தியா-எல்ஏசி மாநாட்டில் அமைச்சர்கள் அமர்வில் உரையாற்றிய அவர், இந்தியாவும் எல்ஏசி எனப்படும் லத்தீன் அமெரிக்க மற்றும் கரீபியன் பகுதிகளும் கலாச்சார உறவுகளைக் கொண்டுள்ளன என்றார்.

மேம்பட்ட வர்த்தகம், முதலீடு மற்றும்  ஒத்துழைப்புகள் மூலம் வணிகங்களை ஒருங்கிணைத்தல் மற்றும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் (எஃப்.டி.ஏ) ஆகியவற்றின் மூலம் விரைவான பொருளாதார வளர்ச்சியில் இந்தியா ஆர்வத்துடன்  உள்ளது என்று திரு பியூஷ் கோயல் கூறினார்.

இந்தியாவுக்கும் எல்ஏசி பகுதிக்கும் இடையே ஒத்துழைப்பை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு விரிவான நான்கு அம்ச செயல்திட்டத்தை அவர் முன்வைத்தார்: (1) வர்த்தகத்தை அதிகரித்தல், (2) இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துதல், (3) சுகாதாரம் மற்றும் மருந்துகள் துறையில் ஒத்துழைப்பு மற்றும் (4) உலகளாவிய பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் முயற்சிகள் ஆகியவை அந்த 4 அம்ச செயல்திட்டமாகும்.

சுற்றுலா, விருந்தோம்பல், சுகாதாரம் போன்ற துறைகளில் விநியோகத் தொடர்களை ஒருங்கிணைப்பதன் முக்கியத்துவத்தை அமைச்சர் வலியுறுத்தினார். சுகாதாரம் மற்றும் மருந்துகள் துறை  ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக, மருந்துத் துறையில் பரஸ்பர அங்கீகார ஒப்பந்தங்களின் முக்கியத்துவத்தையும், சிறந்த ஒழுங்குமுறை நடைமுறைகளைப் பின்பற்றுவதன் முக்கியத்துவத்தையும் அமைச்சர் வலியுறுத்தினார். 

திவாஹர்

Leave a Reply