உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ராகுல் காந்தி உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார். அந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.எஸ்.நரசிம்ஹா மற்றும் சஞ்சய் குமார் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கினை விசாரித்த உச்ச நீதிமன்றம், ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டைனைக்கு இடைக்கால தடை விதித்துள்ளது.
அந்த உத்தரவின் உண்மை நகல், நமது வாசகர்களின் பார்வைக்காக இங்கு நாம் பதிவு செய்துள்ளோம்.
ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு வழக்கு விசாரணையின்போது, அவரது சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிசேக் மனு சிங்வி, “நீதிபதி இதனை தார்மிக ஒழுக்கக் கேடான ஒரு கடுங்குற்றமாக பார்க்கிறார். இது ஒரு பிணையில் வரக்கூடிய குற்றமாகும். இந்தக் குற்றம் சமூகத்துக்கு எதிரானதோ, கடத்தலோ, பாலியல் வன்கொடுமையோ, கொலைக் குற்றமோ இல்லை. அப்படியிருக்கையில், இது எப்படி தார்மிக ஒழுக்கக் கேடான குற்றாமாகும்?
ஜனநாயகத்தில் நமக்குள் கருத்து வேறுபாடுகள் உள்ளன. ஜனநாயகத்தில் நமக்குள் மாற்றுக் கருத்துக்கள் உள்ளன. ராகுல் காந்தி ஒன்றும் கொடுங்குற்றவாளி கிடையாது. பாஜக தொண்டர்களால் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால், எதற்கும் தீர்ப்பு வழங்கப்படவில்லை. ராகுல் காந்தி ஏற்கெனவே இரண்டு நாடாளுமன்ற அமர்வுக்கு செல்லமுடியவில்லை” என்று வாதிட்டார்.
இதற்கு பதில் அளித்த புர்னேஷ் மோடி சார்பில் ஆஜரான மகேஷ் ஜெத்மலானி, “அந்த மொத்தப் பேச்சும் 50 நிமிடங்கள் நீடித்தன. தேர்தல் ஆணையத்தின் ஆவணங்களில் அதற்கான ஆதாரங்களும் வீடியோ பதிவுகளும் இணைக்கப்பட்டுள்ளன. ராகுல் காந்தி ஒட்டுமொத்த சமூகத்தையும் இழிவுபடுத்தியுள்ளார்” என்று வாதிட்டார்.
இந்த வழக்கு விசாரணையின்போது உச்ச நீதிமன்றம் மூன்று விஷயங்களை அவதானித்தது. அவை:
> அந்தப் பேச்சு (ராகுல் காந்தி பேசியது) ரசிக்கக் கூடியதாக இல்லை என்பதில் சந்தேகமில்லை. பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் தங்களின் பேச்சுக்களில் கவனமாக இருக்க வேண்டும். அவமதிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் அவரது பிரமாணப் பத்திரத்தை ஏற்றுக்கொண்டிருக்கும் நிலையில், அவர் தனது பேச்சில் கவனமாக இருந்திருக்க வேண்டும்.
> இந்த வழக்கில் அதிகபட்சம் இரண்டு ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டிருப்பதற்கு எந்த விதமான சிறப்பு காரணத்தையும் விசாரணை நீதிமன்றம் குறிப்பிடவில்லை. தண்டனை 1 வருடம் 11 மாதங்கள் வழங்கப்பட்டிருந்தால் எம்.பி பதவி பறிக்கப்பட்டிருக்காது. இறுதி தீர்ப்பு வரும் வரை அந்தத் தண்டனை நிறுத்தி வைக்கப்பட வேண்டும்.
> விசாரணை நீதிமன்ற உத்தரவின் பாதிப்பு பெரிய அளவில் உள்ளது. அது ராகுல் காந்தி தனது பொது வாழ்க்கையைத் தொடரும் உரிமையைப் பாதிப்பது மட்டும் இல்லாமல், அவரைத் தேர்ந்தெடுத்த வாக்காளர்களின் உரிமையையும் பாதித்துள்ளது என்று உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
–Dr.துரைபெஞ்சமின், BAMS.,
M.A.,SOCIOLOGY,
Ex. Honorary A.W.Officer, Govt Of India,
Editor & Publisher,
www.ullatchithagaval.com
Director, UTL MEDIA OPC PVT LTD,
Mobile No.98424 14040