மத்திய உள்துறை அமைச்சரும் மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு. அமித் ஷா, புனேவில் உள்ள மத்திய கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் (சிஆர்சிஎஸ்) அலுவலகத்தின் டிஜிட்டல் இணையதளத்தை 2023 ஆகஸ்ட் 6-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைக்கிறார். பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையான “கூட்டுறவின் மூலம் செழிப்பு” என்ற கருத்தின் மீது உறுதியான நம்பிக்கை கொண்டுள்ள கூட்டுறவு அமைச்சகம், நாட்டில் கூட்டுறவு இயக்கத்தை வலுப்படுத்த பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அந்த வகையில், கூட்டுறவுத் துறையில் எளிதாக தொழில் புரிவதை ஊக்குவிக்கும் வகையில், மத்திய கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலகம் கணினி மயமாக்கப்பட்டு வருகிறது.
மத்திய பதிவாளர் அலுவலகத்தை கணினி மயமாக்குவதன் முக்கிய நோக்கங்கள்:
i. முற்றிலும் காகிதமில்லா பயன்பாடு மற்றும் செயலாக்கம்
ii. பல மாநிலக் கூட்டுறவுச் சங்கங்கள் சட்டம் (எம்எஸ்சிஎஸ் சட்டம்) மற்றும் விதிகளுக்கு மென்பொருள் மூலம் தானாக இணங்குதல்
iii. தொழில் தொடங்குவதை எளிதாக்குதல்
iv. டிஜிட்டல் தகவல் தொடர்பு
v. வெளிப்படையான செயலாக்கம்
vi. மேம்படுத்தப்பட்ட பகுப்பாய்வு மற்றும் மேலாண்மை தகவல் அமைப்பு
பின்வரும் அம்சங்கள் மத்திய பதிவாளர் இணையதளத்தில் இணைக்கப்படும்:
i. பதிவு செய்தல்
ii. துணைச் சட்டங்களில் திருத்தம்
iii. வருடாந்திர கணக்கு தாக்கல்
iv. மேல்முறையீடு
v. தணிக்கை
vi. ஆய்வு
vii. விசாரணை
viii. நடுவர் மன்றம்
ix. நிறைவு செய்தல் மற்றும் கலைத்தல்
x. குறைதீர்ப்பு முறை
xi. தேர்தல்
எம்எஸ்சிஎஸ் சட்டம்-2002- ல் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் மற்றும் அதன் விதிகளும் புதிய தளத்தில் இடம்பெறும். இந்த தளத்தில் மின்னணு செயல்பாடுகள் மூலம் விண்ணப்பங்கள் மற்றும் சேவை தொடர்பான கோரிக்கைகள் குறிப்பிட்ட காலத்திற்குள் செயலாக்கப்படும். ஓடிபி அடிப்படையிலான பயனர் பதிவு, எம்எஸ்சிஎஸ் சட்டம் மற்றும் விதிகளுக்கு இணங்க சரிபார்ப்பு சோதனைகள், காணொலி மூலம் விசாரணை, பதிவு சான்றிதழ் வழங்குதல் மற்றும் மின்னணு தகவல்தொடர்பு ஆகியவற்றுக்கான ஏற்பாடுகளும் இதில் இருக்கும். இந்த கணினிமயமாக்கல் திட்டம் புதிய எம்எஸ்சிஎஸ் எனப்படும் பல மாநில கூட்டுறவு சங்கங்கள் பதிவுக்கு உதவியாக இருக்கும் என்பதுடன் அவற்றின் செயல்பாட்டை எளிதாக்கும்.
நாடு முழுவதும் 1550-க்கும் மேற்பட்ட பல மாநில கூட்டுறவு சங்கங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2002 ஆம் ஆண்டின் பல மாநில கூட்டுறவு சங்கங்கள் (எம்எஸ்சிஎஸ்) சட்டத்தை நிர்வகிக்கும் பொறுப்பு மத்திய பதிவாளர் அலுவலகத்திற்கு உள்ளது. பல மாநில கூட்டுறவு சங்கங்களின் அனைத்து செயல்பாடுகளையும் எளிதாக்கவும், புதிய பல மாநில கூட்டுறவு சங்கங்களை பதிவு செய்வது உட்பட அனைத்திலும் டிஜிட்டல் சூழலை உருவாக்கவும் மத்திய பதிவாளர் அலுவலகம் கணினிமயமாக்கப்பட்டு வருகிறது.
புதிதாக உருவாக்கப்பட்ட மத்திய பதிவாளர் அலுவலக தளத்தை உருவாக்குவதில் இளைஞர்களின் பங்கேற்பு மற்றும் யோசனைகளை ஏற்கும் வகையில் ‘ஹேக்கத்தான்’ போட்டியும் ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும், புதிய மத்திய பதிவாளர் அலுவலக இணையதளத்திற்கு அனைத்து தேசிய கூட்டுறவு சங்கங்கள் மற்றும் பல மாநில கூட்டுறவு சங்கங்களிடமிருந்து ஆலோசனைகள் மற்றும் கருத்துக்கள் வரவேற்கப்பட்டன.
திவாஹர்