தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டம் தாமிரபரணி (பொருநை) ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள புராதன மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆதிச்சநல்லூர் தொல்லியல் களம் அருகே அமையவுள்ள அருங்காட்சியகத்திற்கு மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் இன்று (ஆக. 5, 2023 – சனிக்கிழமை) அடிக்கல் நாட்டினார்.
முன்னதாக தொல்லியல் களத்திற்கு வருகை தந்த அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அன்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் ஆய்வு களத்தில் வைக்கப்பட்டிருந்த பழங்கால மட்பாண்டங்கள் மற்றும் இதரப் பொருட்கள் ஆகியவற்றைப் பார்வையிட்டார் அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
அருங்காட்சியகத்திற்கு அடிக்கல் நாட்டி வைத்த பின், தொல்லியல் துறையின் சிறப்புகளை விவரிக்கும் நூலையும், ஆதிச்சநல்லூர் தொல்லியல் களம் குறித்த நூலையும் அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், ஆதிச்சநல்லூர் தளத்தின் தனித்துவமான, பாரம்பரியமான மற்றும் வளமான வரலாற்றை எடுத்துரைத்தார். கி.மு 467 ஆம் ஆண்டைச் சேர்ந்த பல்வேறு பொருட்களும், கி.மு 665 ஆம் ஆண்டைச் சேர்ந்த சிறுதானியங்கள், நெல் மற்றும் உமி போன்ற உணவு தானியங்களும் இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அமைக்கப்படவிருக்கும் தொல்லியல் அருங்காட்சியகத்தில் இந்த அரிய கலைப்பொருட்கள் அனைத்தைம் காட்சிப்படுத்தப்படும். இது பார்வையாளர்களுக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கும் உலகத் தரம் வாய்ந்த அனுபவத்தை வழங்கும்.
2021 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ஒரு முன்முயற்சியை நிறைவேற்றும் வகையில், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் மத்திய அரசு இந்த அருங்காட்சியகத்தை அமைக்க நிதி ஒதுக்கியுள்ளது. ஆதிச்சநல்லூர் வழியாக செல்லும் பயணிகளுக்கு இப்பகுதி சிறந்த தலமாக இருக்கும். மேலும், இப்பகுதியின் கலாச்சார பாரம்பரியம் மற்றும் சுற்றுலா மேம்பாட்டுக்கு இது பெரிதும் பங்களிக்கும்.
பார்வையாளர்களின் அனுபவத்தை மேலும் மேம்படுத்துவதற்காக ஒளி மற்றும் ஒலி காட்சியுடன் கூடிய ஆம்பிதியேட்டரை உருவாக்க தொல்லியல் துறையிடம் திட்டங்கள் உள்ளன. காசி தமிழ் சங்கமம் மற்றும் சௌராஷ்டிரா தமிழ் சங்கமன் போன்ற நிகழ்வுகளைக் கொண்டாடுவதன் மூலம் நாட்டின் கலாச்சார ஒருமைப்பாட்டை உறுதி செய்வதற்காக பிரதமர் மோடியின் அரசு எடுத்துள்ள பரந்த முயற்சிகளுடன் இந்த முன்முயற்சியை எடுத்துக் காட்டுகிறது.
இந்தியாவின் வளமான கலாச்சாரப் பாரம்பரியத்தை பாதுகாப்பதற்கான ஒருங்கிணைந்த முயற்சியின் ஒரு பகுதியாக, தற்போது பெர்லினில் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்ட பொருட்களை குறிப்பாக ஆதிச்சலூருக்கு சொந்தமான கலைப்பொருட்களை திருப்பி எடுத்துவர அரசு தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.. அரசின் இத்தகைய முயற்சிகளின் விளைவாக இதுவரை 350 க்கும் மேற்பட்ட பண்டைய கலைப்பொருட்கள் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொருட்கள் இந்தியாவுக்கு திரும்ப கொண்டுவரப்பட்டுள்ளன என அமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.
இந்தியாவின் வளமான கலாச்சாரப் பாரம்பரியத்தை தற்போதைய மற்றும் எதிர்கால சந்ததியினருக்காக கௌரவிக்கவும், பாதுகாக்கவும், காட்சிப்படுத்தவும் மத்திய அரசின் பல்வேறு விரிவான முயற்சிகளை மத்திய நிதியமைச்சர் எடுத்துரைத்தார்.
எம்.பிரபாகரன்