மத்திய உள்துறை அமைச்சரும் கூட்டுறவு அமைச்சருமான திரு. அமித் ஷா இன்று மகாராஷ்டிராவின் புனேயில் உள்ள மத்திய கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் (சிஆர்சிஎஸ்) அலுவலகத்தின் டிஜிட்டல் போர்ட்டலை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மகாராஷ்டிரா முதலமைச்சர் திரு ஏக்நாத் ஷிண்டே, மத்திய கூட்டுறவுத் துறை இணையமைச்சர் திரு பி.எல்.வர்மா உள்ளிட்ட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு அமித் ஷா, மகாராஷ்டிராவிலிருந்து நாடு முழுவதும் பரவிய கூட்டுறவு கலாச்சாரம், நாட்டில் கூட்டுறவு இயக்கத்தை முன்னோக்கி கொண்டு செல்கிறது என்று கூறினார். குஜராத், மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில், அதாவது முந்தைய மும்பை மாநிலத்தின் பகுதிகளில் மட்டுமே கூட்டுறவு இயக்கம் முன்னேறி செழித்து வளர்ந்துள்ளது என்று திரு ஷா கூறினார். மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் மத்திய பதிவாளரை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கும் பணியைத் தொடங்குவது மிகவும் பொருத்தமானது என்று அவர் கூறினார். பல மாநில கூட்டுறவு சங்கங்களை இயக்கும் மத்திய பதிவாளர் (சி.ஆர்.சி.எஸ்) அலுவலகத்தின் பணிகள் இன்று முற்றிலும் டிஜிட்டல் மயமாகி வருவதாகவும், புதிய கிளைகளைத் திறப்பது, பிற மாநிலங்களுக்கு விரிவாக்கம் செய்வது அல்லது தணிக்கை செய்வது போன்ற கூட்டுறவு சங்கங்களின் அனைத்து பணிகளும் இப்போது ஆன்லைனில் செய்யப்படும் என்றும் திரு ஷா கூறினார். பதிவு செய்தல், துணை விதிகளில் திருத்தம் செய்தல், தணிக்கை செய்தல், மத்திய பதிவாளரால் தணிக்கை கண்காணிப்பு, தேர்தல் செயல்முறை, மனிதவள மேம்பாடு, கண்காணிப்பு மற்றும் பயிற்சி ஆகிய அனைத்து செயல்பாடுகளையும் உள்ளடக்கிய இந்த இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கடந்த 9 ஆண்டுகளில், நாட்டின் கோடிக்கணக்கான ஏழை மக்களுக்கு அடிப்படை வசதிகளை வழங்க பிரதமர் மோடி பாடுபட்டுள்ளார். வீடு, மின்சாரம், சுத்தமான குடிநீர், காஸ் சிலிண்டர்கள், கழிவறைகள், ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு மற்றும் மாதத்திற்கு ஒரு நபருக்கு 5 கிலோ உணவு தானியங்களை ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாக வழங்கியுள்ளார். நாட்டின் கோடிக்கணக்கான ஏழை மக்கள் நாட்டின் பொருளாதாரத்துடன் இணைக்கப்படவில்லை என்று திரு ஷா கூறினார், ஆனால் திரு மோடி அவர்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதன் மூலமும், அவர்களின் வங்கிக் கணக்குகளைத் திறப்பதன் மூலமும் அவர்களை அதனுடன் இணைத்தார். நாட்டில் உள்ள ஏழை மக்களுக்கு தொழில் தொடங்க மூலதனம் இல்லை என்றால், அதற்கு கூட்டுறவு இயக்கம் தான் சரியான வழி என்றும், இதன் மூலம் சிறிய மூலதனம் கொண்ட பலர் ஒன்றிணைந்து ஒரு பெரிய நிறுவனத்தை தொடங்கலாம் என்றும் அவர் கூறினார்.
எம்.பிரபாகரன்