புதுச்சேரியில் நடைபெற்ற வரவேற்பு மற்றும் ஜிப்மரில் புதிய மேம்பட்ட நேரியல் முடுக்கி கருவி, வில்லியனூரில் 50 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனையின் துவக்க விழாவில் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவின் உரை.

குடியரசுத்தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக புதுச்சேரிக்கு வருகை தருவதில் மிகுந்த ஆவலோடு இருந்தேன். இங்கு வந்ததில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். புதுச்சேரி மக்கள் எனக்கு அளித்த வரவேற்பை நான் போற்றுவேன்.

என்னைப் பொறுத்தவரை, எனது முதல் வருகை, ஸ்ரீ அரவிந்தரின் 150 வது பிறந்த நாள் கொண்டாட்டங்களுடன் இணைந்திருப்பது, மிகுந்த ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த விஷயம். வந்தே மாதரம் பத்திரிகையில் நாட்டிற்கு முழுமையான சுதந்திரம் வேண்டும் என்ற விருப்பத்தை வெளிப்படையாக வெளிப்படுத்திய இந்தியாவின் முதல் அரசியல் தலைவர்களில் இவரும் ஒருவர். அன்னாரது தெய்வீக ஆன்மாவை வணங்கி தலைவணங்குகிறேன்.

தாய்மார்களே, அன்பர்களே,

வரலாற்றின் வெவ்வேறு கட்டங்களில் வெவ்வேறு காரணங்களுக்காக புதுச்சேரி வெவ்வேறு மக்களை ஈர்த்துள்ளது என்பது மிகவும் சுவாரஸ்யமானது. சுமார் 350 ஆண்டுகளுக்கு முன்பு புதுச்சேரியில் பிரெஞ்சுக்காரர்கள் தங்கள் வர்த்தக நிலையங்களை நிறுவினர். இந்தியாவில் உள்ள பிரெஞ்சு பிரதேசங்களின் கவர்னர் ஜெனரலாக இருந்த டூப்ளே, புதுச்சேரியை பிரெஞ்சுக்காரர்களின் முக்கிய கோட்டையாக மாற்ற விரும்பினார். பிரெஞ்சுக்காரர்களின் காலனித்துவ லட்சியங்களுக்கு முற்றிலும் மாறாக, மகரிஷி அரவிந்தர் 20 ஆம் நூற்றாண்டில் ஆன்மீக மனநிறைவுக்கான சிறந்த இருப்பிடமாக இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்தார். புதுச்சேரியின் அனைத்துப் பகுதிகளிலும் வழிபாட்டுத் தலங்களைக் காணலாம். இன்று அருள்மிகு மணக்குள விநாயகர் கோயிலிலும், திருக்காஞ்சி கோயிலிலும் சக குடிமக்களுக்காக இறைவனிடம் ஆசி பெறப் போகிறேன்.

புதுச்சேரியின் ஆன்மீக அம்சம், யோகாவை ஊக்குவிக்கும் மிக முக்கியமான மையங்களில் ஒன்றாகும். சர்வதேச யோகா திருவிழாவைக் கொண்டாட ஒவ்வொரு ஆண்டும் ஒரு பெரிய கூட்டத்தை இது காண்கிறது.

தாய்மார்களே, அன்பர்களே,

பிரெஞ்சுக் குடியேற்றப் பகுதியில் வாழ்ந்தாலும், புதுச்சேரி வாசிகள் சுதந்திரப் போராட்டத்தில்  சம அளவில் தீவிரமாக இருந்தனர். சிறந்த எழுத்தாளர்கள் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் தாயகமாக புதுச்சேரி திகழ்கிறது. கவிஞர் பாரதிதாசன் இங்குதான் பிறந்தார். இந்த புண்ணிய பூமி ஒரு காலத்தில் மகா கவிஞரும், தேசியவாதியும், சமூக சீர்திருத்தவாதியுமான மகாகவி சுப்பிரமணிய பாரதியின் இருப்பிடமாக இருந்தது. புதுச்சேரியில் தனது தேசியவாத நடவடிக்கைகளை மேற்கொண்ட அவர், இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முக்கியப் பங்கு வகித்தார். பிரபல தமிழறிஞரும், சுதந்திரப் போராட்ட வீரருமான வ.வே.சு.அய்யர் பாரதியாரின் சமகாலத்தவராவார்.

தாய்மார்களே, அன்பர்களே,

புதுச்சேரியின் அரசியல் மற்றும் சமூக புவியியல் அசாதாரணமானது. இந்த யூனியன் பிரதேசத்தின் நான்கு பிராந்தியங்களில், புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாம் ஆகியவை வங்காள விரிகுடாவில் அமைந்துள்ளன. மாஹே, அரபிக் கடலில் அமைந்துள்ளது. மேலும், யூனியன் பிரதேசத்தின் நான்கு பிராந்தியங்களும் தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் கேரளாவின் பகுதிகளுக்குள் அமைந்துள்ளன.

தாய்மார்களே, அன்பர்களே,

இங்கு புதுச்சேரியில், பல்வேறு கலாச்சாரங்களின் கலவையை நாம் காண்கிறோம். வேற்றுமையில் ஒற்றுமை என்ற இந்திய நெறிமுறைகளைக் கொண்டாடும் துடிப்பான கலாச்சாரப் பாரம்பரியத்தை நீங்கள் முன்னெடுத்துள்ளீர்கள். தமிழ், தெலுங்கு, மலையாள சாயல்கள் தென்படுகின்றன. பிரெஞ்சுக்காரர்களின் தாக்கமும் அப்படித்தான். கட்டிடக்கலை, திருவிழாக்கள் மற்றும் வாழ்க்கைமுறைகள், நல்லிணக்கத்துடன் ஒன்றிணையும் பல்வேறு தாக்கங்களை பிரதிபலிக்கின்றன. புதுச்சேரியின் துடிப்பான கலாச்சாரம், தமிழ்நாட்டில் நிலவும் இசை மற்றும் நடன வடிவங்களிலிருந்து அதிக ஆற்றலைப் பெறுகிறது. பிரெஞ்சு பாரம்பரியமான முகமூடி திருவிழாவில் மகிழ்ச்சி உணர்வு வெளிப்படுகிறது. உண்மையில், புதுச்சேரி, பிரான்சுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நட்புறவின் பாலமாகும்.

அளவில் சிறியதாக இருக்கும் இந்த யூனியன் பிரதேசம், மிகவும் அழகானது. “சிறியதுதான் அழகானது” என்ற சொற்றொடரை இது நிரூபிக்கிறது.

தாய்மார்களே, அன்பர்களே,

ஒரு புகழ்பெற்ற சர்வதேச நிறுவனம் நடத்திய ஆய்வின்படி, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சமூக முன்னேற்ற குறியீட்டு மதிப்பெண் 2022 இல் புதுச்சேரி முதலிடத்தில் உள்ளது என்பதை அறிந்து நான் மகிழ்ச்சியடைகிறேன்.

• தனிநபர் சுதந்திரம் மற்றும் தேர்வு,

• தங்குமிடம்

• குடிநீர் மற்றும் சுகாதாரம்

ஆகிய  அளவுருக்களில் இது மிகவும் சிறப்பாக செயல்பட்டுள்ளது:

நாட்டிலேயே அதிக கல்வியறிவு பெற்ற பகுதியாக புதுச்சேரி திகழ்வது பாராட்டுக்குரியது. இங்கு பாலின விகிதம் பெண்களுக்கு சாதகமாக உள்ளது. புதுச்சேரி மக்கள் பாலின சமத்துவத்தில் நம்பிக்கை கொண்டுள்ளனர் என்பதை இந்த உண்மைகள் நிரூபிக்கின்றன. இவை உண்மையான முற்போக்கு மனநிலையின் குறிகாட்டிகளாகும். புதுச்சேரி மக்களின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கான நவீன மற்றும் உணர்திறன் அணுகுமுறைக்காக நான் அவர்களைப் பாராட்ட வேண்டும்.

குறிப்பாக புதுச்சேரியில் உயர்கல்வி சிறப்பாக மேம்படுத்தப்பட்டுள்ளதை பாராட்டுகிறேன். இங்கு சிறந்த கல்வி நிறுவனங்கள் உள்ளன. பல்வேறு பகுதிகளில் இருந்தும் மாணவர்கள் உயர்கல்விக்காக இங்கு வந்து செல்கின்றனர்.

தாய்மார்களே, அன்பர்களே,

ஜவஹர்லால் முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் (ஜிப்மர்)  இந்த அரங்கில் இருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்தக் கலையரங்கம் எனது மிகச்சிறந்த முன்னோடிகளில் ஒருவரான டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் பெயரால் அழைக்கப்படுகிறது. அவரது பல பங்களிப்புகளுள், பாதுகாப்பு ஆராய்ச்சியை மருத்துவ நோக்கங்களுக்காகப் பயன்படுத்தும்  முயற்சிகளை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இந்த வரவேற்பு நிகழ்ச்சிக்கு  சற்று முன்பு, சர்வதேச புகழ் பெற்ற இந்த நிறுவனத்தில் ஒரு புதிய மேம்பட்ட நேரியல் முடுக்கி கருவியை  நான் திறந்து வைத்தேன். புற்றுநோயாளிகளுக்கு கதிரியக்க  சிகிச்சை அளிக்க இது பயன்படுத்தப்படும் என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது. இந்த உபகரணம் கதிர்வீச்சை துல்லியமாக குறிவைப்பதன் மூலம் கதிர்வீச்சு வெளிப்பாட்டைக் குறைக்கும். இந்த இயந்திரம், நோய் தீர்க்கும் கதிர்வீச்சு சிகிச்சையை வழங்குவதற்கான நிறுவனத்தின் திறனை அதிகரிக்கும் என்பதை நான் புரிந்துகொள்கிறேன். இது மலிவான மேம்பட்ட மருத்துவ சேவையை அதிகரிக்கும்.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply