புதுதில்லி, பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் இன்று நடைபெற்ற தேசிய கைத்தறி தின கொண்டாட்ட நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் திரு. நரேந்திர மோடி, தேசிய ஆடைவடிவமைப்பு தொழில்நுட்ப நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ‘ஜவுளி மற்றும் கைவினைப்பொருட்களின் களஞ்சியம்’ என்ற தளத்தை தொடங்கி வைத்தார். கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த பொருட்களை பார்வையிட்ட பிரதமர், நெசவாளர்களுடன் கலந்துரையாடினார்.
கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், பாரத் மண்டபத்தின் திறப்பு விழா நடைபெறுவதற்கு முன்பு பிரகதி மைதானத்தில் நடைபெற்ற கண்காட்சியில் கண்காட்சியாளர்கள் தங்கள் தயாரிப்புகளை ஒரு கூடாரத்தில் காட்சிப்படுத்தியதை நினைவு கூர்ந்தார். இந்தியாவின் கைத்தறித் தொழிலின் சிறப்புகளை எடுத்துரைத்த பிரதமர், பழைய மற்றும் புதியவற்றின் சங்கமம் இன்றைய புதிய இந்தியாவை வரையறுக்கிறது என்றார். இன்றைய இந்தியா உள்ளூர் பொருட்களுக்கு உத்வேகம் அளிப்பதோடு மட்டுமல்லாமல், அதை உலகளவில் எடுத்துச் செல்வதற்கான தளத்தையும் வழங்குகிறது என்று அவர் கூறினார். இன்றைய நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பு நெசவாளர்களுடனான தமது உரையாடல்கள் குறித்து பேசிய பிரதமர், இன்றைய பிரமாண்ட கொண்டாட்டங்களில் நாடு முழுவதிலுமிருந்து பல்வேறு கைத்தறிக் குழுவினர் இருப்பதைக் குறிப்பிட்டு அவர்களை வரவேற்றார்.
“ஆகஸ்ட் மாதம் ‘கிராந்தி’ மாதம்” என்று பிரதமர் குறிப்பிட்டார். இந்தியாவின் சுதந்திரத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒவ்வொரு தியாகத்தையும் நினைவுகூர வேண்டிய நேரம் இது என்று அவர் கூறினார். சுதேசி இயக்கம் குறித்துப் பேசிய பிரதமர், அது வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஜவுளிகளை புறக்கணித்ததோடு நின்றுவிடாமல், இந்தியாவின் சுதந்திரப் பொருளாதாரத்திற்கு உத்வேகம் அளித்தது என்று கூறினார். அந்த இயக்கம் நெசவாளர்களை மக்களுடன் இணைக்கும் இயக்கம் என்றும், அந்த இயக்கம் தொடங்கப்பட்ட இந்த நாளை தேசிய கைத்தறி தினமாக அரசு தேர்ந்தெடுத்ததன் காரணம் இதுதான் என்றும் அவர் கூறினார். கடந்த சில ஆண்டுகளில், கைத்தறித் தொழில் மற்றும் நெசவாளர்களின் வளர்ச்சிக்காக முன்னெப்போதும் இல்லாத வகையில் பணிகள் செய்யப்பட்டுள்ளன என்பதை பிரதமர் சுட்டிக் காட்டினார்.
திவாஹர்