அனைவரும் பெருமைமிக்க இந்தியர்களாக இருக்க வேண்டும் என்றும், எப்போதும் தேசத்தை முதன்மைப்படுத்த வேண்டும் என்றும் குடியரசு துணைத் தலைவர் திரு. ஜக்தீப் தன்கர் அழைப்பு விடுத்தார். இன்று தில்லி பிரகதி மைதானத்தில் இருந்து ‘வீடுகள் தோறும் மூவண்ணக்கொடி’ என்பதற்கான மோட்டார் சைக்கிள் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தபோது “உங்கள் வரலாற்றுச் சாதனைகளில் பெருமிதம் கொள்ளுங்கள். உங்கள் வரலாற்றுச் சாதனைகளை அங்கீகரித்து உலகம் வியக்கிறது” என்று குடியரசு துணைத் தலைவர் கூறினார். பங்கேற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் பாராட்டிய திரு. தன்கர், இணக்கமான மற்றும் நட்பு ரீதியான சூழலை உருவாக்குவதில் இதுபோன்ற நிகழ்வுகளின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டினார். 2047 ஆம் ஆண்டில், இந்தியா சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடையும் போது, அது உலக அரங்கில் முதலிடத்தில் இருக்கும் என்றும் குடியரசு துணைத் தலைவர் நம்பிக்கை தெரிவித்தார்.
நமது சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் நிறுவனர்களின் தியாகம் மற்றும் பங்களிப்புகளை அங்கீகரிப்பதற்கும் நினைவுகூர்வதற்கும் இது ஒரு வாய்ப்பு என்பதை திரு தன்கர் சுட்டிக் காட்டினார். நமது தேசத்துப் பெருமையின் சின்னமான தேசியக் கொடி உயரமாக பறக்க வேண்டும் என்பதை ஒவ்வொரு இந்தியரும் உறுதி செய்ய வேண்டும் என்பதை அவர் வலியுறுத்தினார். இந்த முயற்சியை விரிவுபடுத்த ‘வீடுகள் தோறும் மூவண்ணக்கொடி’ இயக்கம் மற்றும் மோட்டார் சைக்கிள் பேரணியை வெற்றிகரமாக ஏற்பாடு செய்ததற்காக கலாச்சார அமைச்சகத்தின் முயற்சிகளையும் குடியரசு துணைத் தலைவர் பாராட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய வடகிழக்குப் பிராந்திய கலாச்சாரம், சுற்றுலா மற்றும் மேம்பாட்டு அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி, “கடந்த ஆண்டைப் போலவே நாம் அனைவரும் மீண்டும் ஒன்றிணைந்து ‘வீடுகள் தோறும் மூவண்ணக்கொடி’ இயக்கத்தை வெற்றிகரமாக்க வேண்டும் என்றார். ‘வீடுகள் தோறும் மூவண்ணக்கொடி ஒரு தேசமாக நமது ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் காட்டுகிறது”. இன்று முதல், ஒவ்வொரு கிராமத்திலும், ஒவ்வொரு கல்வி நிறுவனத்திலும், ஒவ்வொரு நகரத்திலும் ஆகஸ்ட் 15 சுதந்திர தினம் வரை நாடு முழுவதும் ‘மூவண்ணக்கொடி யாத்திரை’ நடத்தப்படும் என்று திரு ஜி கிஷன் ரெட்டி தெரிவித்தார்.
வர்த்தகம் மற்றும் தொழில்துறை, நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் மற்றும் ஜவுளித் துறை அமைச்சர் திரு. பியூஷ் கோயல்; தகவல், ஒலிபரப்பு மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர்; ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், சட்டம் மற்றும் நீதித் துறை இணையமைச்சர், நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் கலாச்சாரத் துறை இணையமைச்சர் திரு அர்ஜுன் ராம் மேக்வால்; கலாச்சாரத் துறை இணையமைச்சர் திருமதி மீனாட்சி லேகி மற்றும் பிரமுகர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
‘வீடுகள் தோறும் மூவண்ணக்கொடி’ இயக்கத்தின் விழிப்புணர்வை அதிகரிக்க கலாச்சார அமைச்சகத்தால் சுதந்திரத்தின் அமிர்தப் பெருவிழாவின் பகுதியாக இந்தப் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஒரே இந்தியா உன்னத இந்தியா என்ற உணர்வில் இந்திய மக்களுக்கும் தேசிய கொடிக்கும் இடையே தேசபக்த உணர்வை வளர்ப்பதற்கும், இணைப்பதற்கும் இது மத்திய அரசின் முன்முயற்சியாகும். பிரகதி மைதானத்தின் ஹால் எண் 14-ல் இருந்து தொடங்கிய இந்தப் பேரணி பைரோன் மார்க் வழியாக இந்தியா கேட் நோக்கிச் சென்றது. பேரணி இந்தியா கேட் முழுவதும் சுற்றி வந்து தேசிய போர் நினைவுச்சின்னத்திற்கு எதிரே உள்ள மேஜர் தயான் சந்த் விளையாட்டரங்கில் நிறைவடைந்தது. இந்த நிகழ்வில் நாட்டுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், தேசபக்த உணர்வைத் தூண்டும் வகையிலும் கலகலப்பான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
கடந்த ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் பேரணி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. ‘வீடுகள் தோறும் மூவண்ணக்கொடி’ இயக்கம் ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் ஒருங்கிணைத்து ஒரு கூட்டுக் கொண்டாட்டத்தின் உணர்வுகளைக் கற்பனை செய்து தேசபக்த உணர்வை அதிகரிக்க ஊக்குவித்தது. கடந்த ஆண்டைப் போலவே, ஒவ்வொரு குடிமகனும் தனது இல்லத்தில் தேசியக் கொடியைப் பெருமிதத்துடன் ஏற்றுவதன் மூலம் இதில் இணைய வேண்டும் என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார். “‘வீடுகள் தோறும் மூவண்ணக்கொடி’ இயக்கம் பொதுமக்களிடமிருந்து விதிவிலக்கான மற்றும் இதயப்பூர்வமான வரவேற்பைப் பெற்றுள்ளது. அதற்கு முந்தைய ஆண்டு இந்த இயக்கம் பரந்த அளவில் செயல்படுத்தப்பட்டது, குறிப்பிடத்தக்க வேகத்தையும் குறிப்பிடத்தக்க மக்கள் ஈடுபாட்டையும் பெற்றது, இது மக்கள் பங்கேற்பின் சாராம்சத்தை எடுத்துக்காட்டுகிறது.
எம்.பிரபாகரன்