ரயில் நிலையங்களுக்கு வருகை தரும் பயணிகளின் ஆரோக்கியம் மற்றும் நலனை மேம்படுத்தும் முயற்சியில், உரிமம் பெற்றவர்களால் இயக்கப்படும் ரயில் நிலையங்களின் சுற்று வட்டாரப் பகுதிகள் மற்றும் சந்திப்புகளில் பிரதமரின் மக்கள் மருந்தக மையங்களை நிறுவுவதற்கான கொள்கை கட்டமைப்பை இந்திய ரயில்வே உருவாக்கியுள்ளது.
தமிழகத்தில் திருச்சி, ஈரோடு, திண்டுக்கல் ரயில் நிலையங்களில் இந்த மருந்தகங்கள் அமைகின்றன.
கோடிக்கணக்கான தினசரி பார்வையாளர்கள் மற்றும் பயணிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, இந்திய ரயில்வே அதன் நிலையங்களில் உள்ள வசதிகளை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது.
அந்த வகையில், தரமான மருந்துகள் மற்றும் நுகர்பொருட்கள் (மக்கள் மருந்துப் பொருட்கள்) மலிவு விலையில் அனைவருக்கும் கிடைக்கச் செய்யும் மத்திய அரசின் நோக்கத்தை ஊக்குவிக்க இந்த மருந்தகங்கள் அமைக்கப்படுகின்றன.
குறைந்த விலையில் மருந்துகளை வழங்குவதன் மூலம் சமூகத்தின் அனைத்துப் பிரிவினரிடையேயும் ஆரோக்கியம் மற்றும் நலனை மேம்படுத்து வதும், தொழில் முனைவோருக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதும் இதன் நோக்கமாகும்.
ரயில்வே கோட்டங்களால் அடையாளம் காணப்பட்ட இடங்களில் உரிமதாரர்களால் பி.எம்.பி.ஜே.கேக்கள் அமைக்கப்பட்டு இயக்கப்படும். அந்தந்த ரயில்வே கோட்டங்களைப் போலவே இ-ஏலம் மூலம் ஸ்டால்கள் வழங்கப்படும். இந்த ஸ்டால்களை என்ஐடி அகமதாபாத் வடிவமைக்கும்.
விற்பனை நிலையங்களின் வெற்றிகரமான ஏலதாரர்கள் மருந்துக் கடையை நடத்த தேவையான அனுமதிகள் மற்றும் உரிமங்களைப் பெறுவதுடன், மருந்துகளை சேமிப்பதற்கான அனைத்து சட்டப்பூர்வ தேவைகளுக்கும் இணங்க வேண்டும்.
எம்.பிரபாகரன்