ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் 4 சிறுத்தை தோல்களை வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் பறிமுதல்.

ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகர் பகுதிகளில் உள்ள சில கும்பல்கள் சட்டவிரோத வனவிலங்கு வர்த்தகத்தில் ஈடுபடுவதாகவும், சிறுத்தை தோல்களை விற்பனை செய்வதற்காக அவற்றை வாங்குபவர்களைத் தேடுவதாகவும் குறிப்பிட்ட உளவுத் தகவலை அடுத்து, வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (டிஆர்ஐ) ஒரு நடவடிக்கையைத் தொடங்கியது. அதன்படி, கும்பலைச் சேர்ந்தவர்களைப் பிடிக்க விரிவான திட்டம் தீட்டப்பட்டது.

வாங்குவோர் போல் வேடமிட்டு, மும்பை மண்டல பிரிவு (கோவா பிராந்திய பிரிவு) அதிகாரி ஜம்மு காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகருக்கு வந்தார்.

பல சுற்று பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, விற்பனையாளர்கள் சிறுத்தையின் முதல் தோலை ஸ்ரீநகரில் தால்கேட் அருகே முன்பே நியமிக்கப்பட்ட இடத்திற்கு கொண்டு வந்தனர். கண்காணிப்பு பணியில் இருந்த அதிகாரிகள் குறிப்பிட்ட இடத்திற்கு அருகே சிறுத்தை தோலை வைத்திருந்த நபரை மடக்கி பிடித்தனர். அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில், ஸ்ரீநகரில் உள்ள பொது இடத்தில் மற்றொரு கூட்டாளியும் தடுத்து நிறுத்தப்பட்டார்.

மற்றொரு விற்பனையாளர் கும்பலுடன் தீவிர பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தன. இரவு நேர பேச்சுவார்த்தைக்குப் பிறகு, விற்பனையாளர்கள் இறுதியாக 3 சிறுத்தை தோல்களை முன்பே நியமிக்கப்பட்ட இடத்திற்கு கொண்டு வர ஒப்புக்கொண்டனர். தடைசெய்யப்பட்ட பொருளை (3 சிறுத்தை தோல்கள்) எடுத்துச் சென்ற 3 பேர் தடுத்து நிறுத்தப்பட்டனர். அவர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவலின்படி, இந்த பரிவர்த்தனையுடன் தொடர்புடைய மேலும் 3 பேர் அருகில் பொது இடத்தில் காத்திருப்பது தெரிய வந்தது. உடனடியாக 2 தனிப்படைகள் அனுப்பப்பட்டு 3 பேரை மடக்கிப் பிடித்தனர். இவ்வாறு, இந்த சட்டவிரோத வனவிலங்கு வர்த்தகத்தில் ஈடுபட்ட ஒரு காவல்துறை அலுவலர் உட்பட மொத்தம் 8 பேர் தடுத்து நிறுத்தப்பட்டு, மொத்தம் 4 சிறுத்தை (பாந்தெரா பர்டஸ்) தோல்கள் மீட்கப்பட்டன. முதற்கட்ட விசாரணையில் லடாக், தோடா, உரி ஆகிய பகுதிகளில் இருந்து சிறுத்தைகள் வேட்டையாடப்பட்டது தெரியவந்தது.

திருத்தப்பட்ட வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டம், 1972 இன் பிரிவு 50 (1) (சி) இன் விதியின் கீழ் 4 சிறுத்தை தோல்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டம், 1972 இன் கீழ் பறிமுதல் செய்யப்பட்ட பொருள் மற்றும் குற்றம் செய்த 8 நபர்கள், 1972 ஆம் ஆண்டின் வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டத்தின் கீழ், ஆரம்ப பறிமுதல் நடவடிக்கைகளுக்குப் பிறகு ஜம்மு-காஷ்மீரின் வனவிலங்கு பாதுகாப்புத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply