தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கத்தின் முன்னேற்றத்திற்கான ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, இந்தியாவுக்கான பசுமை ஹைட்ரஜன் தரநிலையை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்திய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் (எம்.என்.ஆர்.இ) வெளியிட்டுள்ள தரநிலை, உற்பத்தி செய்யப்படும் ஹைட்ரஜனை ‘பசுமை’ என்று வகைப்படுத்துவதற்கு, அதாவது புதுப்பிக்கத்தக்க மூலங்களிலிருந்து பூர்த்தி செய்ய வேண்டிய உமிழ்வு வரம்புகளை கோடிட்டுக் காட்டுகிறது. வரையறையின் நோக்கம் மின்னாற்பகுப்பு அடிப்படையிலான மற்றும் உயிரி அடிப்படையிலான ஹைட்ரஜன் உற்பத்தி முறைகள் இரண்டையும் உள்ளடக்கியது.
இந்த விஷயத்தில் தொடர்புடைய பல தரப்பினருடனான கலந்துரையாடல்களுக்குப் பிறகு, புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் பசுமை ஹைட்ரஜன் குறித்து வரையறுக்க முடிவு செய்துள்ளது.
பசுமை ஹைட்ரஜனை அளவிடுதல், அறிக்கையிடுதல், கண்காணித்தல், தள சரிபார்ப்பு மற்றும் சான்றிதழ் ஆகியவற்றிற்கான விரிவான முறை புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தால் குறிப்பிடப்படும் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி திட்டங்களுக்கான கண்காணிப்பு, சரிபார்ப்பு மற்றும் சான்றிதழுக்கான முகமைகளின் அங்கீகாரத்திற்கான ஒருங்கிணைப்பு முகமையாக எரிசக்தி அமைச்சகத்தின் எரிசக்தி செயல்திறன் பணியகம் (பி.இ.இ) இருக்கும் என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
திவாஹர்