மத்தியப் பிரதேச வேலைவாய்ப்பு முகாமில் பிரதமர் திரு. நரேந்திர மோடி காணொலிக் காட்சி வாயிலாக இன்று உரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், இன்று நியமனக் கடிதங்களைப் பெறுபவர்கள் இந்த வரலாற்றுக் காலத்தில் கற்பிக்கும் முக்கிய பொறுப்பில் இணைந்துள்ளனர் என்று கூறினார். நாட்டின் வளர்ச்சியில் தேசிய பண்பின் முக்கியப் பங்கை விவரிக்கும் வகையில் செங்கோட்டையில் இருந்து உரையாற்றிய பிரதமர், இன்று வேலை பெறுபவர்கள் அனைவரும் இந்தியாவின் எதிர்கால சந்ததியினரை வடிவமைத்து, அவர்களை நவீனமயமாக்கி, அவர்களுக்கு ஒரு புதிய திசையை வழங்கும் பொறுப்பை வகிப்பார்கள் என்று சுட்டிக் காட்டினார். இந்த வேலைவாய்ப்பு முகாமின் மூலம் இன்று மத்தியப் பிரதேசத்தின் தொடக்கப் பள்ளிகளில் நியமிக்கப்பட்ட ஐந்தாயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு அவர் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். கடந்த 3 ஆண்டுகளில் மத்தியப் பிரதேச மாநிலத்தில் சுமார் 50 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்த பிரதமர், இந்த சாதனைக்காக மாநில அரசைப் பாராட்டினார்.
வளர்ச்சியடைந்த இந்தியாவின் உறுதிப்பாட்டை நிரூபிப்பதில் பெரும் பங்களிப்பைக் கொண்ட தேசிய கல்விக் கொள்கையை செயல்படுத்துவதில் புதிய பணிநியமனங்கள் முக்கியப் பங்கு வகிக்கும் என்று குறிப்பிட்ட பிரதமர், பாரம்பரிய அறிவு மற்றும் எதிர்காலத் தொழில்நுட்பத்திற்கு சமமான முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது என்று கூறினார். தொடக்கக் கல்வித் துறையிலும் புதிய பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், தாய்மொழிக் கல்வி தொடர்பாக முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். ஆங்கிலம் தெரியாத மாணவர்களுக்கு தாய்மொழியில் கல்வி வழங்காததால் ஏற்படும் பெரும் அநீதியை சுட்டிக்காட்டிய பிரதமர், தற்போதைய அரசு இப்போது பாடத்திட்டத்தில் பிராந்திய மொழிகளில் உள்ள புத்தகங்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருவதாகவும், இது நாட்டின் கல்வி முறையில் ஒரு பெரிய மாற்றத்திற்கு அடிப்படையாக மாறும் என்றும் தெரிவித்தார்.
எம்.பிரபாகரன்