இந்திய கடற்படையும், இலங்கை கடற்படையும் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு, மீனவர்கள் அச்சமின்றி மீன்பிடிப்பதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும்!- தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.

நாகப்பட்டிணம் மாவட்டம், வேதாரண்யம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் கடலில் மீன்பிடித்துகொண்டு இருந்த பொழுது, இலங்கை கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்ட செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

வேதாரண்யம் மீனவர்கள் 11 பேர் ஆறுகாட்டுத்துறை கடற்கரையில் இருந்து கடலில் மீன்பிடிக்க சென்றனர். அப்பொழுது அங்கு வந்த இலங்கையை சேர்ந்த கடற்கொள்ளையர்கள் மீனவர்களை ஆயுதங்களால் தாக்கி அவர்களிடம் இருந்த 1000 கிலோ மீன்பிடி வலை, திசைக்காட்டும் கருவி, செல்போன்கள் போன்ற 5 லட்சம் மதிப்புள்ள பொருள்களை பறித்து சென்றுள்ளனர்.

கொள்யைர்களின் தாக்குதலால் மீனவர் திரு. பாஸ்கர் மற்றும் அருள்ராஜ் ஆகியோர் படுகாயம் அடைந்துள்ளர். மேலும் காயமடைந்த மீனவர்கள் வேதாரண்யம் அரசு மருத்துவனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது. தொடர்ந்து இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள், தாக்கப்பட்டும் படகுகளை சேதப்படுத்தியும், படகுகளை கைப்பற்றியும் இன்னலுக்குள்ளாகி வருகின்றனர். ஆனால் தற்பொழுது இலங்கை கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்டு, கொள்ளையடிக்கப்பட்டது மிகுந்த கவலையளிக்கிறது.

இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடைபெறாதவாறு இந்திய கடற்படையும், இலங்கை கடற்படையும் தொடர் கண்காணிப்பில் ஈடுபடவேண்டும். தாக்குதலில் ஈடுபட்டவர்களை கண்டுபிடித்து உரிய தண்டனை வழங்க வேண்டும், மீனவர்கள் அச்சமின்றி மீன் பிடிப்தற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

எஸ்.திவ்யா

Leave a Reply