தில்லி கடற்படை குழந்தைகள் பள்ளியில் ஆண்டுவிழா கொண்டாட்டம்.

தில்லியில் உள்ள கடற்படை குழந்தைகள் பள்ளி ஆண்டு விழா 2023, ஆகஸ்ட், 23 அன்று தல்கடோரா உள்விளையாட்டு அரங்கில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் கடற்படைத் தளபதி அட்மிரல் ஆர்.ஹரி குமார் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். இந்நிகழ்வில் கடற்படை உயர்  அதிகாரிகள், பிரமுகர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வின் கருப்பொருள் நித்திய கற்றல் மற்றும் நீடித்த அறிவொளியின் ‘தொடக்கத்தை’ குறிக்கும் சமஸ்கிருத வார்த்தையான ‘உத்பவம்’ ஆகும்.

சங்கல்பைச் சேர்ந்த மாணவர்களின் பரவசமான தேசபக்தி நிகழ்ச்சியுடன் நிகழ்ச்சி தொடங்கியது. என்.சி.எஸ் குழந்தைகளின் நிகழ்ச்சி இந்தியாவின் வளமான கலாச்சார பாரம்பரியத்தை சித்தரிக்கும் பல்வேறு பிராந்தியங்களின் பாரம்பரிய கலை வடிவங்களை உள்ளடக்கியது. சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் ஊழலற்ற சமுதாயத்தையும் இந்த நிகழ்ச்சி ஊக்குவித்தது.

பள்ளி முதல்வர் திருமதி ஓஷிமா மாத்தூர், மாணவர் தலைவர்,  மாணவி தலைவி  ஆகியோருடன் இணைந்து, கல்வி, விளையாட்டு மற்றும் இதரப் பிரிவுகளின்  சாதனைகள் மற்றும் பள்ளியின் புதிய முயற்சிகளை எடுத்துரைத்து, பள்ளியின் அறிக்கையை சமர்ப்பித்தார்.

சிறப்பாக செயல்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை சிறப்பு விருந்தினர் பாராட்டினார். பள்ளியில் அவர்கள் பெறும் மதிப்புகள், கோட்பாடுகள், விமர்சன பகுப்பாய்வு மற்றும் ஆக்கப்பூர்வமான சிந்தனை ஆகியவை அவர்களை நாளைய தலைவர்களாகவும், கொள்கை வகுப்பாளர்களாகவும், தொழில்நுட்ப வல்லுநர்களாகவும் உருவாக்கும் என்று அவர் குழந்தைகளிடம் கூறினார். 2047 க்குள் இந்தியாவை ஒரு வளர்ந்த நாடாக அதன் சரியான இடத்திற்கு கொண்டு செல்வதில் அவர்கள் நமது நாட்டின் தலைவர்களாக இருப்பார்கள் என்று கடற்படை தலைமை தளபதி குழந்தைகளுக்கு நினைவூட்டினார். குழந்தைகள் பின்பற்ற வேண்டிய பன்னிரண்டு அம்சங்களை  அவர் எடுத்துரைத்தார்.  இதன் மூலம் சிறந்த குடிமக்களாக மாறுவதற்கும், சமூகத்தில் நேர்மறையான வழியில் செல்வாக்கு செலுத்துவதற்கும் அவர்களுக்கு உதவும்.

இந்த நிகழ்வின் போது சந்திரயான்-3 நிலவில் தரையிறங்குவது நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பார்வையாளர்கள் அனைவரும் பெருமிதத்துடன் இந்த நிகழ்வை கண்டுகளித்தனர்.

தில்லி கடற்படை குழந்தைகள் பள்ளிக்கு தொடர்ச்சியான ஆதரவின் அடையாளமாக, பள்ளியின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக ரூ.10 லட்சத்திற்கான காசோலையை தலைமை விருந்தினர் வழங்கினார்.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply