மறைந்த என்.டி.ராமாராவின் நினைவு நாணயத்தை குடியரசுத்தலைவர் வெளியிட்டார் .

மறைந்த என்.டி.ராமாராவின் நூற்றாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (ஆகஸ்ட் 28, 2023) குடியரசுத்தலைவர் மாளிகையின் கலாச்சார மையத்தில் நினைவு நாணயத்தை வெளியிட்டார்.

விழாவில் பேசிய குடியரசுத்தலைவர், மறைந்த என்.டி.ராமாராவ், தெலுங்கு திரைப்படங்கள் மூலம் இந்திய திரைப்படத் துறையையும், கலாச்சாரத்தையும் வளப்படுத்தியுள்ளார்  என்று தெரிவித்தார்.  ராமாயணம் மற்றும் மகாபாரதத்தின் முக்கிய கதாபாத்திரங்களுக்கு தனது நடிப்பின் மூலம் அவர்  உயிர் கொடுத்தார். அவர் நடித்த ராமர் மற்றும் கிருஷ்ணர் கதாபாத்திரங்கள் மிகவும் உயிர்ப்புடன் இருந்ததால் மக்கள் என்.டி.ஆரை வணங்கத் தொடங்கினர். என்.டி.ஆரும் தனது நடிப்பின் மூலம் சாமானிய மக்களின் வலியை வெளிப்படுத்தியதாக  குடியரசுத்தலைவர் குறிப்பிட்டார். அனைத்து மனிதர்களும் சமம் என்ற தனது ‘மனுசுலந்தா ஒக்கதே’ படத்தின் மூலம் சமூக நீதி மற்றும் சமத்துவம் குறித்த செய்தியை பரப்பினார்.

ஒரு பொது சேவகராகவும், தலைவராகவும் என்.டி.ஆரின் புகழ், சமமாக பரந்து விரிந்துள்ளது என்று குடியரசுத்தலைவர் கூறினார். தனது அசாதாரண ஆளுமை மற்றும் கடின உழைப்பின் மூலம் இந்திய அரசியலில் ஒரு தனித்துவமான அத்தியாயத்தை உருவாக்கினார். பல மக்கள் நலத் திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார், அவை இன்று வரை நினைவில் உள்ளன.

என்.டி.ஆரை  போற்றும் வகையில்  நினைவு நாணயத்தை  அறிமுகப்படுத்தியதற்காக இந்திய அரசின் நிதி அமைச்சகத்தை குடியரசுத்தலைவர் பாராட்டினார். அவரது தனித்துவமான ஆளுமை, எப்போதும் மக்களின் இதயங்களில், குறிப்பாக தெலுங்கு பேசும் மக்களின் இதயங்களில் பதிந்திருக்கும் என்று அவர் கூறினார்.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply