எஃகு அமைச்சகம் மற்றும் நிலக்கரி அமைச்சகம் ஆகியவற்றுக்கு இடையிலான கூட்டு முயற்சிகள் உள்நாட்டு கோக்கிங் நிலக்கரி கிடைப்பதை அதிகரித்து, இறக்குமதியை குறைத்துள்ளன. உள்நாட்டு கச்சா கோக்கிங் நிலக்கரி உற்பத்தி 2030 ஆம் ஆண்டில் 140 மெட்ரிக் டன்னை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் சுத்திகரிக்கப்பட்ட பிறகு சுமார் 48 மெட்ரிக் டன் பயன்படுத்தக்கூடிய கோக்கிங் நிலக்கரி கிடைக்கும். எஃகு உற்பத்திக்கு இன்றியமையாத கோக்கிங் நிலக்கரி, அதிகம் கிடைப்பதால் நாட்டில் எஃகு உற்பத்தி சார்ந்த தொழில்துறைகளின் வேகமான வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.
தேசிய எஃகு கொள்கை 2017-ன் படி, கோக்கிங் தேவையை நிவர்த்தி செய்வதற்காக நிலக்கரி அமைச்சகம் 2022 நிதியாண்டில் “மிஷன் கோக்கிங் நிலக்கரி” என்ற இயக்கத்தைத் தொடங்கியது. தற்சார்பு இந்தியா முன்முயற்சியின் கீழ் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் நடவடிக்கையின் மூலம் கோக்கிங் நிலக்கரி இறக்குமதியை கணிசமாகக் குறைப்பதை இந்த இயக்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆய்வு, மேம்பட்ட உற்பத்தி, தொழில்நுட்ப வளர்ச்சி, கோக்கிங் நிலக்கரி சுரங்கங்களில் தனியார் துறையின் ஈடுபாடு, புதிய சலவைத் தொழிற்சாலைகளை நிறுவுதல், அதிகரித்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் தர மேம்பாடு ஆகியவை இந்த இயக்கத்தின் நடவடிக்கைகளில் அடங்கும்.
எஃகுத் துறைக்கு உள்நாட்டு கோக்கிங் நிலக்கரியின் விநியோகத்தை வலுப்படுத்தவும், அதிகரித்து வரும் தேவையைப் பூர்த்தி செய்யவும், பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
கோக்கிங் நிலக்கரி முன்முயற்சிகளை ஊக்குவிக்க எடுக்கப்பட்ட சில நடவடிக்கைகள் பின்வருமாறு:
கோக்கிங் நிலக்கரி சுரங்கங்கள் ஏலம்: 16 கோக்கிங் நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்கீடு செய்ததன் மூலம் நிலக்கரி அமைச்சகம் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதில், 2022-23 ஆம் ஆண்டில் 4 பிளாக்குகள் ஏலம் விடப்பட்டன.
கைவிடப்பட்ட சுரங்கங்களுக்கு புத்துயிர் அளித்தல்: பாரத் கோக்கிங் நிலக்கரி லிமிடெட் (பி.சி.சி.எல்) நிறுவனத்தால் கைவிடப்பட்ட அல்லது நிறுத்தப்பட்ட சுரங்கங்களிலிருந்து கோக்கிங் நிலக்கரி பிரித்தெடுப்பை மேற்கொள்ளவதற்கு, சில நிறுவனங்களை அழைப்பதன் மூலம் புதிய வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன. வருவாய் பகிர்வு மாதிரி மூலம், இந்த முயற்சியின் மூலம் 8 சுரங்கங்களை புதுப்பித்து பணிகளை மேற்கொள்ள வாய்ப்பு அளிக்கறது.
செயில் உடனான ஒத்துழைப்பு: இந்திய எஃகு ஆணையம் லிமிடெட் (செயில்) மற்றும் பி.சி.சி.எல் ஆகியவை கோக்கிங் நிலக்கரி கிடைப்பதை அதிகரிக்க 1.8 மெட்ரிக் டன் கழுவப்பட்ட கோக்கிங் நிலக்கரியை வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
கச்சா கோக்கிங் நிலக்கரி ஏலம்: பி.சி.சி.எல் மற்றும் சென்ட்ரல் கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் (சி.சி.எல்) ஜூன் 2023-ல் ஏலத்தை ஏற்பாடு செய்தன. டாடா ஸ்டீல் சிசிஎல் சுரங்கங்களிலிருந்து 50,000 டன் கச்சா கோக்கிங் நிலக்கரியை ஏலத்தில் எடுத்தது. இது உள்நாட்டு ஆதாரத்திற்கான உறுதிப்பாட்டை வலுப்படுத்தியது.
புதுமையான கிரீன்ஃபீல்டு சலவைகள்: நிலக்கரி அமைச்சகம் கோக்கிங் நிலக்கரி கிடைப்பதை அதிகரிக்க கிரீன்ஃபீல்ட் சலவை ஆலைகளை நிறுவுவதை அல்லது தற்போதுள்ள பி.சி.சி.எல் சலவை ஆலைகளை புதுப்பிக்க ஊக்குவிக்கிறது.
இந்த உத்திரீதியான முன்முயற்சிகள் உள்நாட்டு கோக்கிங் நிலக்கரி உற்பத்தியை வலுப்படுத்துகின்றன.
எஸ்.சதிஸ் சர்மா