இந்தியக் கடற்படை ஆகஸ்ட் 27 அன்று கோவாவில் கடல் பயணம் 4-க்கான தயாரிப்புகளை முறையாகத் தொடங்கியது. அதன் ஒரு பகுதியாக, ஓஷன் செயிலிங் நோட் என்ற அமைப்பு இரண்டு தன்னார்வப் பெண் அதிகாரிகளுக்கு வழிகாட்டியாகவும் பயிற்சியாளராகவும் இருக்க கோல்டன் குளோப் பந்தய வீரர் சிடிஆர் அபிலாஷ் டோமியுடன் (ஓய்வு) புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. லெப்டினென்ட் கமாண்டர் தில்னா, லெப்டினன்ட் கமாண்டர் ரூபா ஆகியோர் அடுத்த ஆண்டு இந்தியக் கடற்படையின் பாய்மரக் கப்பலான தாரிணியில் உலகளாவிய சுற்றுப் பயணத்தை மேற்கொள்ளும் குழுவை அமைப்பார்கள்.
பணியாளர் சேவைகள் கட்டுப்பாட்டாளரும், இந்தியக் கடற்படை பாய்மரப் படகு சங்கத்தின் (ஐ.என்.எஸ்.ஏ) துணைத் தலைவருமான வி.டி.எம்.கிருஷ்ணா சுவாமிநாதன், கடற்படை போர்க் கல்லூரி கமாண்டன்ட் ராஜேஷ் தங்கர் ஆகியோர் முன்னிலையில் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்நிகழ்வில் கடற்படையினர் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
வி.ஏ.டி.எம்.சுவாமிநாதன் இரண்டு பெண் அதிகாரிகளின் அற்புதமான கடல் பாய்மர சாகசங்களுக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, நான்காம் கடல் பயணத்திற்கு அவர்கள் தயாரானதற்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும், இந்தியக் கடற்படையின் கடல் பாய்மரப் பயண முயற்சிக்கு உறுதுணையாக இருந்த அட்மிரல் அபிலாஷ் டோமிக்கு அவர் நன்றி தெரிவித்தார்.
வரும் மாதங்களில், அரபிக்கடல், வங்காள விரிகுடா மற்றும் இந்தியப் பெருங்கடலில் பல குறுகிய மற்றும் நீண்டதூரப் பாய்மரப் பயணங்களை மேற்கொள்வது உட்பட, சி.டி.ஆர் டோமியின் வழிகாட்டுதலின் கீழ் சவாலான பணிக்காக இரு அதிகாரிகளும் கடுமையாகப் பயிற்சி பெறுவார்கள். சி.டி.ஆர் டோமி மற்ற பாய்மரப் பயணங்களின் பங்கேற்பாளர்களுக்கு வழிகாட்டுவார் மற்றும் ஊக்கமளிக்கும் உரையாடல்கள் மூலம் பயிற்சி நிறுவனங்களுடன் தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வார்.
கடல் பயணம் 4 முன்னெப்போதும் மேற்கொள்ளப்படாத ஒரு முயற்சியாகவும், இந்தியாவின் கடல் பாய்மரப் படகுப் பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாகவும் இருக்கும்.
எம்.பிரபாகரன்